விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளி செப்டிக் டேங்கில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
செப்டிக் டேங்கில் தவறி விழுந்து குழந்தை பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ - சேவை மைய ஒப்பந்த பணியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். பழனிவேலுக்கும் சிவசங்கரி தம்பதிக்கும் பிறந்த மூன்று வயது பெண் குழந்தை லியா லட்சுமி விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள சென் மேரீஸ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப்பள்ளியில் எல் கே ஜி படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று குழந்தையை பள்ளியில் பெற்றோர்கள் குழந்தை விட்டு சென்றுள்ளனர்.
குழந்தையானது 01; 50 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகிலுள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை கழிவறைக்கு சென்றுவிட்டு அருகிலுள்ள செப்டிக் டேங்க் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை செப்டிக் டேங்க் மீது போடப்பட்ட இரும்பு தகடு மூடி முழுவதுமாக மூடப்பட்டிருந்தது துரு பிடித்து இருந்ததால் குழந்தையின் பாரம் தாங்காமல் குழந்தை செப்டிக் டேங்க் மூடி உடைத்து கொண்டு உள்ளே விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கிறார். செப்டிக் டேங்க் உள்ள பகுதி அருகிலுள்ள கட்டிடத்தில் வகுப்பு எடுத்திருந்த குழந்தையின் ஆசிரியர் ஏஞ்சல் நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் கழிவறைபகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததை பார்த்தபோது உள்ளே குழந்தை இறந்து கிடந்துள்ளது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினரே செப்டிக் டேங்க்கில் இருந்த குழந்தையை இரண்டு கம்புகள் பயன்படுத்தி மேலே தூக்கி குழந்தை மீட்டு கார் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை செய்தனர். அப்போது குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்ததை மீட்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரனை செய்தனர். அஜாக்கரதையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஏற்கனவே ஆய்வு செய்ததில் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
பள்ளி தாளாளர் உள்ளிட 3 பேர் நள்ளிரவில் கைது
குழந்தையின் பெற்றோர் பழனிவேல் சந்தேக மரணமாக உள்ளதாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நேற்று பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் போராட்டம் செய்து வந்த நிலையில் இன்று பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.