விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி (பி. என் தோப்பு பள்ளி ) எதிரே வள்ளலார் அன்பர்கள் சார்பில் உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். விழுப்புரம் வள்ளலார் அன்பர்கள் நடத்தும் திரு அருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற 201வது ஆண்டு திருநாளையொட்டி ஐம்பெருவிழாவில் ஆதரவற்றவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் என ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது. 


 500 நபர்களுக்கு 5 கிலோ அரிசி 3 கிலோ காய்கறிகள் அடங்கிய தொகுப்பு , துவரம் பருப்பு அரை கிலோ சமையல் எண்ணெய் அரை லிட்டர் ஆகியன வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வள்ளலார் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. மேலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியன வழங்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்த பெரும் விழாவிற்கு விழுப்புரம் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து கலந்து கொண்டு பயனடைந்தனர்.  மேலும் இந்த நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு  பயனுள்ளதாக அமைந்தது என தெரிவித்தனர்.




வள்ளலாரின் 201 வது பிறந்தநாளையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பேசியதாவது:


சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என வள்ளலார் விரும்பினார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றில் இளைஞர்கள் புலமை பெற வேண்டும் என வள்ளலார் விரும்பினார். வள்ளலார் இன்று இருந்திருந்தால் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிச்சயம் பாராட்டியிருப்பார்.வள்ளலாரின் ஆன்மீக கருத்துகள் இன்றும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அவர் சக மனிதர்கள் மீதான கருணையை வலியுறுத்தி ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார்.இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டவர் வள்ளலார். வள்ளலாரின் போதனைகள் அனைவரது வளர்ச்சிக்காகவும், சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தது என கூறினார்.


வள்ளலாரின் 201 வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் உதயநிதி X தளத்தில் பதிவு 


பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற புரட்சித் துறவி வள்ளலாருக்கு இன்று 200ஆம் ஆண்டு பிறந்தநாள்! சூழ்ச்சிகளால் வரலாற்றை திரிப்பவர்கள், எவ்வளவு முயற்சித்தாலும் வள்ளலார் என்றுமே சமத்துவத்தின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்வார். உலகில் சகல துன்பங்களுக்கும் காரணம் பசிக்கொடுமை தான் என்றுணர்ந்த வள்ளலார் வடலூரில் அன்று மூட்டிய அணையா அடுப்பின் நெருப்பு ஒளி தான் இன்று பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பரந்திருக்கிறது. வள்ளலாரின் புரட்சிக் கருத்துகளை உலகறிய செய்வோம். நாமும் கடைப்பிடிப்போம்.