'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனப் பாடிய ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார் வள்ளலார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் 151 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வடலூரில் உள்ள சத்தியஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்து இருந்த நிலையில் கொடியேற்றத்தின் பொழுது பக்தர்கள் குறைந்த அளவில் கலந்த கொண்டனர். பின்னர் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு 151ஆவது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.
அதன்படி காலை 6 மணிக்கு நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது. எப்பொழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனத்தை காண்பது வழக்கம் ஆனால், தற்பொழுது கொரோனா ஊரடங்கு விதிமுறையின் காரணமாக மிகவும் குறைந்த அளவு பக்தர்களே வந்து இருந்தனர் மேலும், பக்தர்களுக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது, ஆனால் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்க என எதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் தங்களது வீட்டில் இருந்த படியே தொலைகாட்சி மூலமாகவும், https://www.youtube.com/ channel/ UCEiJozGGHgOZFISkQAOB93A
எனும் இணையதளம் வாயிலாகவும் இந்த 151 தைப்பூச விழவினை கண்டுகளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு இருந்து. காலை 6 மணி ஜோதி தரிசனத்தை தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.