கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதற்கு அனைத்து சுங்கச்சாவடி ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வேலை செய்து வந்த 28 ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சுங்கச்சாவடி ஊழியர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.






உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து அந்த ஊழியர்கள் 30 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஊழியா்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சந்தித்து பேசினார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-


உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 56 ஊழியர்கள் ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும். ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் சுங்கச்சாவடி நிர்வாகம் செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். வருகிற 3-ந் தேதி டெல்லிக்கு செல்கிறேன். அப்போது இது தொடர்பாக துறை மந்திரியை சந்தித்து பேசுகிறேன். சுங்கச்சாவடி உள்பட அனைத்து பணிகளுக்கும் வட மாநிலத்தில் இருந்து பணியாளர்களை இறக்குமதி செய்கிறார்கள். அவர்களுக்கு ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளும் வழங்கப்படுகின்றது. தேர்தல் நேரத்தில் இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது திராவிட அரசியல் பேசும் கட்சிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே வட இந்தியத்திலிருந்து இதுபோன்று வருகின்ற பணியாளர்களை கட்டுப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என  கூறினார்.