புதுச்சேரியில் பாம் ரவி, அவரது நண்பரை நாட்டு வெடிகுண்டு வீசி கொன்ற இரட்டை கொலை வழக்கில் பாஜக மாநில இளைஞரணி செயலர் விக்கி என்ற விக்னேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். சிறையில் இருக்கும் முக்கிய தாதாவுடன் இணைந்து அவரது உத்தரவுபடி செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி. இவர் மீது கொலை வழக்குகள் பல நிலுவையில் உள்ளது.



வாணரப்பேட்டை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மதியம் தனது நண்பர் அந்தோணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்தோணி மீது வெடிகுண்டுகள் வீசியது. இதையடுத்து அங்கிருந்து பாம் ரவி தப்பியோடினார். அவரை ஓட, ஓட விரட்டி சென்ற கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இந்த விசாரணையில் மற்றொரு வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத், தீனதயாளன் என்ற தீனு ஆகியோரது சதி திட்டத்தின்படி கூலிப்படை வைத்து பாம் ரவி கொலை செயப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள், கூலிப்படையினர் தங்க இடம் கொடுத்தவர்கள் என வினோத்தின் தாய் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். வெடிகுண்டு கொடுத்து உதவியதாக லாஸ்பேட்டையை சேர்ந்த 5 பேரை போலீஸார் மேலும் கைது செய்தனர். மேலும் பிரவீன், அருண் ஆகிய 2 பேரும் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.



அதைத்தொடர்ந்து, பாஜக இளைஞரணி செயலர் விக்னேஷ் என்ற விக்கி என்ற ஷார்ப் விக்கி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, சிறையில் இருந்த ரவுடி வினோத், கூட்டாளி தீனதயாளன் என்ற தீனுவை ஆகியோரை இரண்டு நாள் காவலில் முதலியார்பேட்டை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது பல தகவல்கள் கிடைத்தன. ஏற்கெனவே இருந்த முன்விரோதம் மட்டுமில்லாமல் சிறையில் உள்ள தாதா மணிகண்டனுக்கும் பாம் ரவிக்கும் முன்விரோதம் இருந்தது.




அதனால், அவரை கொல்லும் எண்ணமிருந்தது. அப்போது வினோத்தும் அதே எண்ணத்தில் இருந்தார். இரட்டை கொலை சம்பவத்தில் வெளியில் இருந்த பாஜகவைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் , சிறையிலுள்ள தாதா மணிகண்டனுக்கு உதவியதற்கான ஆதாரப்பூர்வ தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதிரடிப்படை போலீஸார் தேடும் பணியை தொடங்கினர். அதையடுத்து தற்போது வாணரப்பேட்டையைச் சேர்ந்த விக்கியை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் பல முக்கிய தகவல்களும் கிடைத்துள்ளன. அதில் ரவுடிகள் மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகர்களும் இவ்வழக்கில் சிக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண