Train Accident: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு, பயங்கர சத்தம் எழுந்ததும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


தண்டவாளத்தை விட்டு இறங்கிய ரயில் 


விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது. 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த 5 பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. இதனால் பயங்கர சத்தம் எழுந்ததால் பயணிகள் ரயிலை உடனடியாக அதன் ஒட்டுநர் நிறுத்தினார். இதனால் விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்படுவது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து பயணிகள் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதனையடுத்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே ஊழியர்களும், பொறியாளர்களும் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் ரயிலை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது தொழில்நுட்ப கோளாறு காரணமா அல்லது நாச வேலை ஏதேனும் காரணமா என்பது குறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை நடத்த தொடங்கியுள்ளனர்.