விழுப்புரம்: கனமழை எதிரொலி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை 16.10.2024 புதன்கிழமை மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இவை தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் 15,16,17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை
இந்த நிலையில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் என மாவட்டத்தில் முழுவதும் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீன கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16-10-2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.