விழுப்புரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழையால் மரக்காணம் அருகே சிறுவாடி கிராம பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நின்ற மழை நீரால் பொதுமக்கள் அவதியுற்று இருக்கின்றனர்.


தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதலே விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தில் பிரதான சாலையில் மழை நீர் தேங்கியு உள்ளது மரக்காணத்திலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் பிரதான சாலை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.


இதில் வடிநீர் வாய்க்கால்கள் அமைக்கும் பணி முழுமையாக நடைபெறாததன் காரணமாகவே சிறுவாடி கிராமத்தில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இந்த மழை நீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், வணிகர்கள் என பலரும் அவதி அடைந்து வருகின்றனர். மழைக்காலங்கள் தூங்குவதற்கு முன்னே வடிநீர் வாய்க்கால்களை முழுமையாக கட்டி முடித்திருக்க வேண்டும் எனவும் கட்டுமான பணிகள் முழுமை பெறாததன் காரணமாகவே மழைநீர் தேங்கி நிற்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர், மேலும் சம்பவ இடத்தில் தற்போது நெடுஞ்சாலைத் துறையினர் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இதே போன்று மரக்காணத்தில் பல்வேறு கிராமங்களிலும் உள்ள தெருக்களில் மழை தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை 


விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் என மாவட்டத்தில் முழுவதும் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளி, கல்லூரிகளுகு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீன கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் அதிகப்படியாக மரகாணத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மழை நிலவரம் 


விழுப்புரம்: 1 செ.மீ









திண்டிவனம்: 6 செ.மீ


மரக்காணம்: 8 செ.மீ


செஞ்சி: 2 செ.மீ


கோலியனூர்: 5 செ.மீ


வளவனூர்: 5 செ.மீ


முண்டியம்பாக்கம்: 6 செ.மீ


கஞ்சனுர்: 3 செ.மீ


சூரப்பட்டு: 4 செ.மீ


மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:


14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.





மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


தமிழக கடலோரப்பகுதிகள்: 


14.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.