கெட்டுப்போன மட்டன் பிரியாணி
விழுப்புரம்: விழுப்புரம் (Villupuram) புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராவுத்தர் பிரியாணி கடையில் கெட்டுப் போன மட்டன் பிரியாணியை வழங்கியதாக லூயிஸ் கிறிஸ்டினா என்ற பெண் கெட்டுப் போன பிரியாணியுடன் உணவகத்தின் முன்பு கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டை பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் கிறிஸ்டினா. இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராவுத்தர் பிரியாணி கடையில் ரூ.230க்கு மட்டன் பிரியாணி வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் பிரியாணியை வீட்டுக்குச் சென்று சாப்பிட பிரித்த நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லூயிஸ் கிறிஸ்டினா பிரியாணியை கடைக்கு எடுத்துச் சென்று கடை ஊழியரிடம் பிரியாணி கெட்டுப்போய் உள்ளது என முறையிட்டார்.
இதற்கு அந்த கடை ஊழியர்கள் எந்தவித பதிலும் அளிக்காததால் அவர் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து லூயிஸ் கிறிஸ்டினா தெரிவிக்கையில், இங்கு வாங்கிய பிரியாணியை பிரித்து சாப்பிட முற்பட்ட நிலையில், இதிலிருந்து துர்நாற்றம் வீசியது. மேலும், பிரியாணியில் இருந்த மட்டன் பிசுபிசுப்புத் தன்மையுடன் காணப்பட்டது. எனவே இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்த கடையில் ஆய்வு செய்து கடையின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரியாணியை சிறிது உட்கொண்ட காரணத்தினால் வாந்தி, பேதி உள்ளிட்டவை எனக்கு ஏற்பட்டுள்ளது. இது போன்று நேற்று இந்த உணவகத்திலிருந்து வாங்கிச் சென்ற சிக்கன் ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டதால் சிறு குழந்தை உள்ளிட்ட இரண்டு நபர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரியாணி கடையில் ஆய்வு
இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிரியாணி கடையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அடிப்படை வசதிகள் இல்லாமலும் கழிவறைக்கு அருகாமையில் பிரியாணி தயாரித்தல் மற்றும் கெட்டுப்போன அரிசி மற்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடித்தனர்.
பிரியாணி கடைக்கு சீல்
இதை தொடர்ந்து சும்மார் 50 கிலோ கோழிக்கறி மற்றும் கெட்டுப்போன அரிசி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் உடனடி அபராதமாக ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்த பின்னர் கடை திறக்க உத்தரவிடப்படும், அதுவரை கடை சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.