விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்  6ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.


இதில்,  இன்று முதல் கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் தேர்தல் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.


முதல் கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலருக்கு 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சித் தலைவருக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8,574 பேரும் என 3,297 பதவியிடங்களுக்கு 10 ஆயிரத்து 873 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான ஓட்டுப்பதிவு 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.


முதல் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 919 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 475 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 பேர் வாக்களிக்க உள்ளனர்.


இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளும் அந்தந்த வாக்கு சாவடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிமற்றும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில் எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமையில் வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளான 296 மற்றும் மிகவும் பதற்றமான 62 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


இதே போன்று, வாக்குப்பதிவு நடைபெறும் ஒன்றியங்களுக்கு சுற்றுப்பகுதியில் 5 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டது.


7 முனைப்போட்டி


 இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் 7 முனைப்போட்டி நிலவுகிறது. பாட்டாள் மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.


7,721 மையங்களில் 41, 93,996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


எந்தெந்த ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு? 


செங்கல்பட்டு: இலத்தூர், செயின்ட்தாமஸ் மவுன்ட், திருக்கழுகுன்றம், திருப்போரூர். 


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்.


விழுப்புரம்: செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவண்டி.


கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை.


வேலூர்: குடியாத்தம், கீ.வ.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு.


ராணிப்பேட்டை: ஆற்காடு, திமிரி, வாலாஜா.


திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர். 


நெல்லை: அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி.


தென்காசி: ஆலங்குளம், கடையம், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர்.