விழுப்புரம் மாவட்டத்தில்:  கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பதற்கு காரணம் இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையே  காரணம் என திண்டிவனத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டியளித்தார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய சி.வி. சண்முகம் தன்னைப் பற்றியும்  தான் சார்ந்த இயக்கத்தை பற்றியும் அவதூறு பரப்பி வருக்கின்ற அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மீது ரோசனை காவல் நிலையத்தில் வழக்கு பதியாத  நிலையில், இன்று திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் நேரில் ஆஜராகி கொடுக்கப்பட்ட புகார் மீது உரிய வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று  மனு அளித்தார்.


பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த சிவி சண்முகம், “தமிழகத்தில் தற்போது கள்ளச்சாராயம், கஞ்சா, அபின், ஊசி, போதை சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துக்கள் பள்ளி, கல்லூரி, கோயில் வளாகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று குற்றச்சாட்டு வைத்துள்ளோம். இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக செவிமடுக்காத காவல்துறையை கையில் வைத்துக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர், நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனுக்கு முடி சூட்டுவதில் காட்டுகின்ற அக்கறையை தமிழக மக்கள் உயிர்பலி ஏற்படுவதில காட்டுவதில்லை. நிர்வாகம் என்னவென்று தெரியாத ஒரு முதலமைச்சர் ஆட்சி செய்வதனால் இன்றைக்கு அப்பாவி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 9 உயிர்கள் கள்ளச்சாராயத்தால் பலியாகி உள்ளது.


இதே போன்று மரக்காணம் அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்  உள்ள ஒரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இதே சாராயத்தை அறிந்தி  பலியாகி உள்ளனர். தற்போது கள்ளச்சாராயத்தினால் மொத்தம் 14 அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது என்றார். உயிர்  பலியாகி உள்ள குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்  மட்டும் சரியாகிவிடுமா?உயிரிழந்தவர்களை தவிர்த்து இன்னும் 50 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். மருத்துவமனைக்கு வராமலும் பல பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆய்வு மேறக் கொள்ள  வந்த பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகிய இரண்டு அமைச்சர்களும் இந்த கள்ளச்சாராயம் யார் விற்பனை செய்தது? இதற்கு யார் காரணம் போன்ற தகவல்களை கூறாமல் கடந்த ஆட்சியில் போதைப் பொருட்கள் விற்றதாக கூறுகின்றார்கள். இந்த இரண்டு ஆண்டுகள் முதலமைச்சராக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி அல்ல மு க ஸ்டாலின். தற்போது நடைபெற்று வருகின்ற இந்த சம்பவங்களுக்கு  திமுக அரசே  காரணம்” என்று கூறினார்.



மேலும், திமுகவினர் அதிக அளவில் போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்கள். உதாரணத்திற்கு திமுகவில் பெண் கவுன்சிலராக இருக்கின்ற நபர் ஒருவரின் கணவர் மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையிலும், அவரது மனைவிக்கு திமுகவின் கவுன்சிலர் சீட்டு வழங்கி வெற்றியும் பெற்றுள்ளார். இதனை பொன்முடி அவர்களும் மஸ்தான் அவர்களும் ஏற்றுக் கொள்வார்களா என்று கேள்வி எழுப்பினார். கள்ளச்சாராயம் விற்கப்படுவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும், காவல்துறையினருமே காரணம் என்று காட்டம் தெரிவித்தார். இந்த கள்ளச்சாராய சாவு குறித்து தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக அரசு சார்பில் நடத்தப்படுகின்ற டாஸ்மாக்கில் இதுபோன்று தமிழகம் முழுவதும் பல உயிர்கள் பலியாகும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் டாஸ்மாக் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பதிலாக 24 மணி நேரமும் விற்கப்படுவதனால் அங்கு தமிழக முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் எத்தனை டாஸ்மாக் பார்கள் அனுமதி பெற்றுள்ளது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.