விழுப்புரம்: எத்தனை சினிமா ஸ்டார்கள் வந்தாலும் நமக்கு போட்டியாளராக வர முடியாது, பாஜக, பாமக கட்சிகளோடு உறவில்லை. வன்னியர் சமூகத்தோடு உறவு உண்டு, நட்பு உண்டு, நல்லிணக்கம் உண்டு. ஆனால் பாமக என்கிற சாதியவாத கட்சியோடு நாங்கள் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார்.
 
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருகின்ற 31ஆம் தேதி திருச்சியில், மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள பேரணி குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் தலைவர் திருமாவளவன்:
 
பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தினால் ஒன்பதாவது, பத்தாவது மாநில மாநாடு என தலைப்பு போடுவார்கள். சில முழு நிலவு மாநாடு என போடுவார்கள் அதில் எந்த அரசியல் கருத்தும் இல்லை. அதனால் தான் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள். மாநாட்டிற்கு ஒரு அரசியல் கருத்து இருந்தால் அது ஒட்டி தலைவர்கள் முன் தயாரிப்போடு பேசுவார்கள். தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு மாநாட்டிலும் ஆயிரம் பொருளை விளக்கக்கூடிய தலைப்புகளுடைய மாநாடுகளை நடத்தக்கூடிய ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். 
 
சாதி, மத அடிப்படையில் மக்களை திரட்டி வைத்துக்கொண்டு, வாக்கு வங்கியை உருவாக்கிக்கொண்டு, பேரம் பேசுகிற அரசியலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செய்ய முடியாது. அதனை யார் செய்தாலும் ஒரு கட்டத்தில் நின்றுவிடும். 
 
நம்முடைய முதன்மையான கடமை என்னவென்றால் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதை பாதுகாக்க தவறி விட்டால் நாம் அரசியல் செய்ய முடியாது. நமக்கான ஆயுதமும், களமும் அதுதான். எத்தனை சினிமா ஸ்டார்கள் வந்தாலும் கூட நமக்கு போட்டியாளராக வர முடியாது. நம்முடைய களம் வேறு. நம்முடைய களத்தில் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது. 
 
வேங்கைவயல் விவகாரத்தை சுட்டிக்காட்டி ஏன் திருமாவளவன் திமுகவை எதிர்த்து கூட்டணியில் இருந்து வெளியே வரவில்லை என சில அரசியல் பதர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் வேங்கைவயல் மற்றும் வடகாடு பிரச்சினைகளில் அதிமுக, பாஜக ஏன் போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பவில்லை. திமுகவை எதிர்க்கும் அதிமுக வேங்கவயல் பிரச்சினை கையில் எடுத்து அரசியல் செய்திருக்கலாம் ஆனால் செய்யமாட்டார்கள். அவர்களால் இந்த களத்திற்கு வரமுடியாது. நாம் தான் போராட முடியும். 
 
நாம் வெளிப்படையாக சொல்கிறோம் பாஜக, பாமக கட்சிகளோடு உறவில்லை என கூறுகிறோம், ஆனால் அந்த சமூகத்தோடு உறவில்லை என நாங்கள் கூறவில்லை. வன்னியர் சமூகத்தோடு உறவு உண்டு, நட்பு உண்டு, நல்லிணக்கம் உண்டு. ஆனால் பாமக என்கிற சாதியவாத கட்சியோடு நாங்கள் உறவு வைத்துக்கொள்ள மாட்டோம் எனப் பேசினார்.