விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வென்மணியாத்தூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலமாக சுமார் 1000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், ஏரியில் இரவு நேரங்களில் உரிய அனுமதியின்றியும், ஆவணங்களின்றியும் பல அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு அதில் உள்ள பார் மண்களை பெயர்ப் பலகைகள் இல்லாத 10 டிப்பர் லாரிகள் மற்றும் 3 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் எடுத்துச் சென்று நகரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு ஏரியில் கொள்ளையடிக்கப்படும் மண் வளத்தினால் கிராமத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாகவும், ஆழமாக தோண்டப்படும் பள்ளங்களால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அந்த ஊரை சேர்ந்த திமுக ஒலக்கூர் ஒன்றிய அவைத்தலைவர் ஆறுமுகம் இந்த மண் கொள்ளையை தடுக்க அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்த நடைவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இங்குள்ள அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து மக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் இதற்கு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது வெண்மணியாத்தூர் பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு தற்போது வரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்தில் விசாரணை செய்து மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்