தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் விளை நிலங்கள் மணல் திட்டுகளாக மாறி விட்டது. இதனால் வாழவழியின்றி நிர்கதியாக நிற்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19ஆம் தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடி கடலூர் வங்க கடலில் சங்கமித்தது. இதில் கடலூர், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்புகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. சில கிராமங்கள் தீவுகளாகவே மாறியது. வாகன போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் 16 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து, மக்காச்சோளம் மற்றும் காய்கறி வகை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 

 



 

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது வெளியே தெரிய தொடங்கி இருக்கிறது. இது பார்ப்பவர்களை கலங்க செய்யும் விதமாக அமைந்துள்ளது. வெள்ள பாதிப்பில் பயிர்கள் சேதமானதுடன், தங்களது விளை நிலங்களை மீட்டு வருவதற்கே பெருந்தொகை செலவாகும் என்கிற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பல இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்து கிடக்கிறது. குறிப்பாக கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு, சுப உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் அனைத்தும் தடம் தெரியாமல் அழிந்து போய்விட்டது. வயல் முழுவதும் ஆற்று மணல் நிரம்பி மணல் திட்டுகளாக மாறி கிடக்கிறது. எனவே இதை மீண்டும் விளை நிலங்களாக எவ்வாறு மாற்றப்போகிறோம் என்று தெரியாமல் கண்கலங்கி நிற்கிறார்கள் இந்த பகுதி விவசாயிகள்.

 



 

 

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த பகுதிகளில் நெல் மற்றும் தினசரி வருவாய் தரும் சாமந்தி பூக்கள், கத்திரிக்காய், மிளகாய் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வந்தோம். ஆனால் வெள்ளத்தில் அவை அனைத்தும் வேரோடு அடித்து செல்லப்பட்டு விட்டது. விளைநிலம் முழுவதும் மணல் திட்டுகளாக மாறி இருக்கிறது. இனி இதில் எங்களால் எப்படி விவசாயம் செய்ய முடியும். இதை மீண்டும் விளை நிலமாக மாற்றுவதற்கே பெரும் தொகை தேவைப்படும், தொகை இருந்தாலும் இங்கு உள்ள மணல் அனைத்தையும் எடுத்து விட்டாலும் நிலத்தின் தன்மை அதன் பிறகு எவ்வாறு இருக்கும் என்பதை கூற முடியாது ஆகவே நாங்கள் மீண்டும் பயிர் செய்ய பல மாதங்கள் ஆகக்கூடும், மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு முறையாக முன்னெச்சரிக்கை குத்திருந்தால் குறைந்த அளவு பயிர்களையாவது காப்பாற்றி இருப்போம் ஆனால் தென்பெண்ணை ஆற்று பெருவெள்ளம், எங்களை வாழவழியின்றி நிர்கதியாக்கிவிட்டது என்று வேதனை தெரிவித்தார்.