உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேட்டில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றிடும் வகையில், அரசு அலுவலகங்கள் அனைத்தும், சொந்தக் கட்டிடத்தில் நவீன அடிப்படை வசதிகளுடன் முறையில் அமைந்திட வேண்டும். அந்த வகையில், பல்வேறு துறைகளுக்கு புதிய அலுவலகங்கள் கட்டிடும் வகையில் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேட்டில், ரூ.3.72/- கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் 965.40 ச.மீ பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இக்கட்டிடத்தில், 482.70 ச.மீ பரப்பளவில் தரை தளமும், 482.70 ச.மீ பரப்பளவில் முதல் தளமும் அமையவுள்ளது. தரை தளத்தில், காத்திருப்போர் அறை, சேமிப்பு அறை, அலுவலக பணியாளர்கள் அறை, மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் அறை, உதவி தொழிலாளர் நல அலுவலர் அறை, கோப்புகள் வைப்பு அறை, முத்திரையிடும் அறை, ஆய்வக அறை, ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை, பொதுக் கழிவறை, சர்வர் அறையும், முதல் தளத்தில், தொழிலாளர் நல அலுவலர் அறை, உதவி தொழிலாளர் நல அலுவலர் அறை, உதவி ஆட்சி அலுவலர் அறை, அலுவலக அறை, கோப்புகள் வைப்பு அறைகள், கூட்டரங்கம், ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டவுள்ளது. கட்டுமானப்பணி விரைந்து முடிக்கப்பட்டு கட்டடம் அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான், இந்தியாவிலேயே முதல் முறையாக தொழிலாளர்களை காத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தினை உருவாக்கி, தமிழ்நாடு முழுவதும் அமைப்புச்சாரா நலவாரியங்களை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, இத்தொழிலாளர் நலவாரியத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வகுத்த வழியில் நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தொழிலாளர்களையும், தொழிலாளர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களையும் காத்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் மூலம், 2021 - 2022 ஆம் நிதியாண்டில் 4,659 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.6,77,52,850/- மதிப்பிலான நிதியுதவியும், 26,648 உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு ரூ.5,67,60,138/- மதிப்பிலான நிதியுதவியும், 64 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.7,38,254/- மதிப்பிலான நிதியுதவியும், 2022 - 2023 நிதியாண்டில், 5,091 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5,52,93,500/- மதிப்பிலான நிதியுதவியும், 6,218 உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு ரூ.1,66,25,000/- மதிப்பிலான நிதியுதவியும், 482 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.9,15,000/- மதிப்பிலான நிதியுதவியும், மழைக்கால நிவாரண நிதியுதவியாக 2021 - 2022 ஆம் நிதியாண்டில் 1,375 பயனாளிகளுக்கு ரூ.68,75,000/- மதிப்பிலான நிதியுதவியும், 2022 - 2023 ஆம் நிதியாண்டில் 390 பயனாளிகளுக்கு ரூ.19,50,000/- மதிப்பிலான நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின்கீழ், தமிழ்நாடு தொழிலாளர் கட்டுமான நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் தானியங்கி ஓட்டுநர் வாரியம் என 18 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நலவாரியங்களில் 6,937 கட்டுமானத் தொழிலாளர்களும், 39,742 உடலுழைப்பு தொழிலாளர்களும், 2,265 ஆட்டோ ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். தொழிலாளர் நலத்துறை முக்கிய நோக்கம், கட்டுமானத் தொழிலாளர் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களின் நலனை பேணிக்காப்பதே ஆகும். அதனடிப்படையில், இத்துறையின் மூலம், தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் மூலமாக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தொழிலாளர்களை காத்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்.