நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட  வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்த வாகனம் ஆய்வுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்பக்கம் சென்றதால் அதிகாரிகள் அதிர்ச்சி.


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், உணவு தரப் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று (05.06.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் சுகாதாரத்துடன் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், பொதுமக்கள் உணவுகளின் தரம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், உணவகங்களில் தயரிக்கப்படும் உணவு கலப்படமின்றி தயாரிக்கப்படுகின்றனவா, கடைகளில் விற்கப்படும் திண்பண்டங்களின் தரம் குறித்து கண்டறியவும், தேவைப்படும் பொழுது தரம் உயர்த்திட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை வழங்குதவற்காகவும் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத் திட்டத்தினை செயல்படுத்தினார்.


அதனடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உணவுப்பொருட்களின் தன்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடவாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. நடமாடும் வாகனத்தின் மூலம், இம்மாதம் முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே உணவுப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் உணவுப்பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளுக்கு இவ்வாகனம் வருகை புரியும் சமயத்தில் உணவுப்பொருட்களில் தங்களுக்குண்டான சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி  அவர்கள் தெரிவித்தார்.


இந்தநிலையில்,  நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம் கொடியசைத்து துவக்கி வைத்த பின் ஆய்வுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே பின்பக்கம் சென்றதால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் அந்த வாகனம் ஆய்வுக்காக வெளியே சென்றது. வழக்கமாக எந்த ஒரு வாகனமும் கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் பணிக்கு உடனடியாக செல்லும் நிலை இருந்தது. ஆனால், கொடி அசைத்து துவக்கி வைத்த உணவு பகுப்பாய்வு கூட வாகனம் திடீரென மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே நின்றதால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.