முன்பெல்லாம் வீட்டில் பெண்ணிற்கு விசேஷம் என்றால் அதற்கு பெண்ணின் தாய் மாமன் சார்பில் ஊரே மிரலும் படி பல வகை சீர் வரிசைகளை கொண்டு வந்து அக்கா மகளுக்கு சீர் செய்வது வழக்கம், ஆனால் தற்பொழுது வளர்ந்து வரும் நவீன யுகத்தில் வளரும் பிள்ளைகள் சீர் வரிசை பாரம்பரிய முறைகள் எல்லாம் கிட்ட தட்ட மறக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டு விட்டனர், இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனிலேயே விசேஷங்கள் நடத்தி ஆன்லைனிலேயே மொய் அனுப்பி வருகின்றனர்.

 



 

 

இவ்வாறு உள்ள சூழலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில்வே மண்டபத்தில் ரயில்வே துறையில் பணிபுரியும் செல்வராசு என்பவரின் மகள் அபிதாவின் மஞ்சள் நீராட்டு விழா இன்று நடைபெற்றது, இந்த மஞ்சள் நீராட்டு விழாவில் சின்னசேலம் வி.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அபிதாவின் தாய்மாமன் ஆன பிரபு என்பவர், ஊரில் இருந்தே மாட்டு வண்டியில் உறவினர்களோடு சீர்வரிசையை எடுத்துக்கொண்டு தமிழரின் மரபுக் கலையான பறையிசை மேளத்துடன் குடம், பழங்கள், தேங்காய் என பல வகை சீர்வரிசைகளை கொண்டு சென்று, விழாவின் நாயகியான தனது அக்கா மகள் அபிதாவை தாய்மாமன் பிரபு மாட்டு வண்டியில் அமர்த்தி ஊர்வலமாக மண்டபத்தை வந்து அடைந்து விழா மேடைக்கு ராணியை அழைத்து செல்வது போல நடக்கும் பொழுது அல்நகரிக்கபட்ட பந்தலை பலர் தூக்கி கொண்டு அழைத்து சென்றனர்.

 



 

பின்னர் மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய வாழ்வியலை பறை சாற்றும் வகையில் தென்னை கீற்றுகளால் ஓலை கூரை கொண்டு குடில்( வீடு) அமைத்து, இருபுறமும் காகித அட்டையால் மாடு, கட்டவண்டி, விறகு தூக்கி செல்லும் பெண் ஏர் கலப்பையுடன் நிற்கும் விவசாயி போன்ற பழைய நினைவுகளை நினைவு ஊட்டும் வகையில் படங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டப மேடை பழைய கிராமப்புற வீடுகளின் அமைப்பினை அழகாக மீண்டும் உருவாக்கி இருந்த மாதிரி வீடு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

 



 

பலரும் பல பழைய பாரம்பரியங்களை மறந்து ஒரு கைப்பேசிக்கு உள் அடைந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தற்பொழுதைய சூழலில் தாய் மாமன் சீர் என்றால் இது தான் என நினைவூட்டும் வகையில் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பிரபு தனது அக்கா மகளுக்கு சீர் செய்து அசத்தியது அப்பகுதி மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்து உள்ளது.