புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சுதந்திர பொன்விழா நகரின் பின்புறம் மொட்டை தோப்பு பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்திற்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகாலமாக சுதந்திர பொன்விழா நகரின் சாலையை பொதுவழியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.




இந்த நிலையில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் மொட்டை தோப்பு பகுதி ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பொது வழியைத் தடுத்து மதில் சுவர் எழுப்புவதற்கு அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஜான்குமார் முயற்சி மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்தது. ஏழை மக்கள் பல ஆண்டுகளாக அவர்களின் பயன்பாட்டில் உள்ள பொது வழியைத் தடுத்து தீண்டாமை போல் மதில் சுவர் எழுப்புவதை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேரணியாக சென்று புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வினி குமாரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தலைமைச் செயலாளர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.




இந்த நிலையில் மீண்டும் மொட்டை தோப்பு பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான பூமி பூஜையில் கலந்துகொள்ள இன்று எம்எல்ஏ ஜான்குமார் வந்தார். இதையடுத்து அவரிடம் அப்பகுதி மக்கள் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து எம்எல்ஏ முன்னிலையில் பூஜை போடப்பட்டு, தடுப்புகள் கட்டப்பட்டு இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது. அதையடுத்து எம்எல்ஏ ஜான்குமார் அங்கிருந்து புறப்பட்டார். இதையடுத்து சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம், தீண்டாமை ஒழிப்பு நிர்வாகிகள் அரிகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதிக்கு வந்து பொதுப்பாதையில் எப்படி தடுப்பு ஏற்படுத்த முடியும் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து ஆட்சியர் வல்லவனிடம் சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம் தகவலைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.




அதையடுத்து மொட்டை தோப்பு பகுதிக்கு வந்த மாவட்டத் துணை ஆட்சியர் கந்தசாமி இரண்டு தரப்பினரிடம் விசாரித்தார். இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் ஏற்கெனவே புகார் தரப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதற்குத் தடை விதித்தார். தடுப்புச் சுவர் அமைக்கத் திட்டமிட்ட இடம் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடம். அந்த இடத்தில் எப்படி தடுப்புகள் அமைக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன், பாதையை மறைத்து வைக்கப்பட்ட தடுப்பு வேலிகளை அகற்ற உத்தரவிட்டார். எம்எல்ஏ பூமி பூஜை போட்டு பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் அதிகாரிகள் உத்தரவால் அகற்றப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண