சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், வன்னிப்பேர் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடவும், பல்வேறு முத்தான திட்டங்களை செயல்படுத்தியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். மேலும், அனைத்து நலத்திட்ட உதவிகளும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றிடுவதை உறுதி செய்திட "கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மக்கள் தொடர்பு முகாமின் முக்கிய நோக்கம், மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும். அந்த வகையில் மாவட்டத்தில் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறியப்பட்டு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 56 பயனாளிகளுக்கு ரூ.15,59,220/- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாவும், 21 பயனாளிகளுக்கு முழுப்புலம் பட்டாவும், 05 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டாவும், 100 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 50 பயனாளிகளுக்கு ரூ.9,45,250/- மதிப்பில் முதியோர் ஓய்வூதியத் தொகை ஆணையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 07 பயனாளிகளுக்கு ரூ.37,492/- மதிப்பில் இலவச தையல் இயந்திரமும், 06 பயனாளிகளுக்கு ரூ.29,226/- மதிப்பில் சலவைப்பெட்டியும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.10,712/- மதிப்பில் இலவச தையல் இயந்திரமும், வேளாண்மைத்துறை சார்பில், 13 பயனாளிகளுக்கு ரூ.23,35,582/- மதிப்பில் வேளாண் கருவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில், 05 பயனாளிகளுக்கு ரூ.4,600ஃ- மதிப்பில் விதைப்பெட்டகங்களும், சுகாதாரத்துறை சார்பில், 08 பயனாளிகளுக்கு ரூ.16,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகமும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், 01 பயனாளிக்கு ரூ.1,70,000/- மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 274 பயனாளிகளுக்கு ரூ.30,06,082/-மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மரக்காணத்தில்தான், பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியினை போக்கிடும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதுமட்டுமல்லாமல், மக்களின் ஆரோக்கியத்தினை காத்திடும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம், பெண்கள் தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம், குழந்தைகள் ஆரோக்கியத்துடன் கூடிய கல்வியினை பெற வேண்டும் என்ற வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்கின்ற வகையில் அரசு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு தொடர்ந்து தெரிவித்திட வேண்டும். கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தினையும் தெளிவாக தெரிவித்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்கள்.


 தமிழ்நாடு அரசானது மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தருவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை காக்கும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. எனவே, நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற்றவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்வதோடு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என தெரிவித்தார்.