விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ஆலங்குப்பம், புதுப்பாக்கம், ஓமிப்பேர், கந்தாடு, வடநெற்குணம், முன்னூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பப்பாளி பயிரிட்டிருந்தனர். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடையாகும் பப்பாளிகள் பெங்களூர், ஆந்திரா, கேரளா, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. உள்ளூரில் 1 கிலோ பப்பாளி ரூ.30 முதல் 40 வரை விற்பனையாகிறது.
தோட்டக்கலை பயிர்:
தோட்டக்கலை பயிர்களை மாற்று பயிராக சாகுபடி செய்வதன் மூலம் சிறு, குறு விவசாயிகளும் அதிக வருமானம் பெறுகிறார்கள். தோட்டக்கலை விளைபொருட்களை வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்துவதாலும், மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றுவதாலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் பெருகுகிறது. எனவே தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, விவசாயிகளின் சீரான உயர்வுக்கான உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், விளைபொருட்கள் குறுகிய கால சேமிப்பு திறனை கொண்டுள்ளதால், அவற்றை சேமிக்க முறையாக திட்டமிடுவதற்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைகளின் கனி என்றழைக்கப்படும் பப்பாளி, பழ வகை மரங்கள் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் இதில் விவசாயிகள் அதிகளவில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பப்பாளி பயன்கள் :
மருத்துவ குணமிக்க பப்பாளி பழங்கள் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடலை மெருகேற்றவும் பயன்படுவதால் பப்பாளி பழங்களுக்கு பொது மக்களிடையே தேவை அதிகரித்துள்ளது. மாம்பழத்திற்கு பிறகு வைட்டமின் ஏ சத்துள்ள சிறந்த ஆதாரம் பப்பாளி ஆகும். இது கொலஸ்ட்ரால், சர்க்கரை மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது. அதனால் தான் மருத்துவர்களும் இதை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது பார்வையை மேம்படுத்துகிறது மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உதவுகிறது. பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்சைம் மருத்துவ குணம் கொண்டது. இந்த பப்பாளி இறைச்சியை மென்படுத்துவதற்கும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும், மதுபான வகைகளில் குளிர்ச்சியை நிலைப்படுத்தவும், ஜவுளி தொழில், காகித தொழில் மற்றும் தோல் பதனிடும் தொழிலும் பயன்படுகிறது. பழுத்த பழங்கள் ஜாம், ஜெல்லி, தேன், க்ரீம் ரொட்டிகளில் பயன்படும் டுட்டிப்ருட்டி எனப் பலவகையாக பதப்படுத்தப்பட்டு பயன்படுகிறது. பல்வேறு பயன்பாடுகளாலும் பப்பாளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் பப்பாளி சாகுபடியினை அதிக அளவில் மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
பப்பாளி சாகுபடியில் அதிக மகசூல்:
பப்பாளி சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் பப்பாளி பயிரில் உள்ள உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்கள் மற்றும் இரகங்களின் குணாதிசயங்களை அறிந்து, தங்கள் பகுதிக்கு ஏற்ற இரகங்களை தேர்வு செய்து, தேர்வு செய்த இரகங்களின் தரமான விதைகளைப் பெற்று, நல்ல முறையில் நாற்றுக்களை உற்பத்தி செய்து, மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்களையும் அறிந்து பயிர் செய்தல் மிகவும் அவசியம்.
பப்பாளி வகைகள் :
தமிழ்நாட்டில் பூசா குள்ளன், பூசா ஜெயன்ட், பூசா நன்ஹா, பூசா டெலிலிசியஸ், பூசா மெஜஸ்டிக், கூர்க்ஹனி டியூ, அர்க்கா சூர்யா, அர்க்கா பிரபாத், சோலோ, வாஷிங்டன், ரான்ச்சி, தாய்வான் 785, தாய்வான் 786, கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, கோ-7, கோ-8 ஆகிய பப்பாளி இரகங்களும் சப்னா (மஞ்சள் நிறம்) ரெட் லேடி (சிவப்பு நிறம்), ரெட் ராயல் (சிவப்பு நிறம்) சிந்தா (மஞ்சள் நிறம்) என வீரிய ஒட்டு ரக பப்பாளிகளும் பயிரிடப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன் கூறியதாவது :-
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த அளவுல பிரதானமான பயிர்கள் நெல், கரும்பு, மணிலா இதுபோன்ற பயிர்கள் பிரதானமாக இருக்கிறது. இதற்கு மாற்றாக தோட்டக்கலை பயிர்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். பழமரபயிர்களை பொறுத்த அளவில் மாற்று பயிராக பப்பாளி அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த பயிர் ஒரு வெப்பமண்டல பயிர், நம்ம விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான நிலப்பகுதியிலும் இது நன்றாக வளர்ந்து மகசூல் தரக்கூடிய ஒரு பயிர். ஒரு ஹெக்டருக்கு வந்து பாத்தீங்கன்னா 3386 செடி தேவை 6 அடிக்கு ஒன்று என்ற இடைவெளியில் வரிசைக்கு வரிசை 6 அடி செடிக்கு, செடி ஆறடி என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 23 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்புள்ள மாநிலத்தில் செடிகள் பப்பாளி செடிகள் மற்றும் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். விவசாயிகள் முறையாக பராமரித்து வந்தால் ஆறு மாதத்திலிருந்து மகசூல் கொடுக்க ஆரம்பித்துவிடும். ஒரு மரத்திற்கு சராசரியாக நூறு கிலோ வந்தால் 3000 மரத்திலிருந்து நமக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
எல்லா விதமான சத்துக்களும் நிறைந்த ஒரு பழம், அனைத்து பகுதி மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள், நகர்ப்புற பகுதிகளில் இதனுடைய தேவை அதிகமாக இருக்கிறது. இதில் வைட்டமின்கள் நார்ச்சத்து போன்ற அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இது ஒரு நல்ல லாபகரமான பயிர் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்யவேண்டும். தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் தரமான நடவு செடிகளை அரசு தோட்டக்கலைப் பணிகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுடைய வயலில் நேரடியா கொண்டு வந்து கொடுக்கிறோம், ஆனால் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல முறையில் சாகுபடி செய்து வருமானம் ஈட்ட வேண்டும் எனவும், சில விவசாயிகள் இதை இயற்கை விவசாயம் ஆகும் ரசாயன உரங்கள் இல்லாமல் வேப்பம், புண்ணாக்கு, வயலில் கிடைக்கக்கூடிய குப்பை, பஞ்சகாவியம், ஜீவாமிர்தம் இது போன்ற இயற்கை கரைசல்களை விவசாயிகளில் அவங்களுடைய வயலில் தயார் செய்து அதை கொடுக்கிறார்கள்.
இந்த மாதிரி இயற்கை முறையில் சாகுபடி செய்யக்கூடிய பழங்களை பொதுமக்கள் நேரடியாக வந்து வயலில் வந்து வாங்குவதால் விவசாயிகள் வந்து தன்னுடைய பொருளுக்கு வந்து நல்ல விலை கிடைக்கும். அறுவடை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே விற்பனை செய்ய ஒரு தளம் இருக்கிறது, இ-நாம் தளத்தில் விவசாயினுடைய பெயரை பதிவு செய்தால் வியாபாரிகள் நேரடியா விவசாய தொடர்பு கொண்டு ஒரு நல்ல விலை கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் இருக்கிறோம், அதனால் இந்த வாய்ப்பு வந்து அனைத்து விவசாயிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் தோட்டக்கலை பொருட்கள் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கு மானியம் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.