விழுப்புரம்: தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.12.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 17.12.2025 முதல் 27.12.2025 வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Continues below advertisement

அதன் தொடர் நிகழ்வாக தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தனித்துவம் குறித்து பொதுமக்களிடையே விழுப்புரம் ஏற்படுத்தும் வகையில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று நான்கு முனை சந்திப்பில் நிறைவடைகிறது. இந்த விழிப்புணர்வு பேரணியில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர்கள் கையில் ஏந்திச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். முன்னதாக, சிலம்பாட்டம் கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு வகையான சிலம்பாட்ட நிகழச்சிகள் நடைபெற்றது.

மேலும், 18.12.2025 அன்று விழுப்புரம் நகராட்சி வணிக வளாக அலுவலகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளை கொண்டு கூட்டமும், 19.12.2025 அன்று அன்னியூர் ஊராட்சியில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி கலை கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சிமொழி பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 22.12.2025, 23.12.2025, 24.12.2025 ஆகிய மூன்று நாள்களும் முறையே அரசு பணியாளர்களுக்கான ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி, மொழி பெயர்ப்பும் கலைச் சொல்லாக்கமும், கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், மற்றும் தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

தமிழ் ஆட்சிமொழியாக சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான 27.12.2025 அன்று பொதுமக்கள் ஆட்சிமொழி சட்டத்தை அறியும் வகையில் ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சி) (பொ) திருமதி ரா.சிவசங்கரி உட்படபலர் கலந்துகொண்டனர்.