நெய்வேலியில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தையை தெரு நாய்கள், கடித்து குதறியது.  இந்நிலையில் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த சபரிநாத் - தமிழரசி எனும் தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள கோல்டன் ஜூப்ளி பார்க்கில் தனது தாத்தாவுடன் சென்ற அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. சிறுவனின் தாத்தா தண்ணீர் பிடிப்பதற்காக சென்று இருந்த பொழுது, பூங்காவில் தனியாக இருந்த அந்த குழந்தையை, திடீரென வந்த 4 தெரு நாய்கள் சேர்ந்து கடிக்கத் தொடங்கி உள்ளது. 

 

தெரு நாய்களால் கடிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது புதுச்சேரியில் பிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவனின் தாய் தமிழரசி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், “ஒரு 2 வயது குழந்தைக்கு நடக்கக்கூடாத சோகம் எனது மகனுக்கு நடந்து உள்ளது. எதிர்பாராத விதமாக தெரு நாய்களால் கடிக்கப்பட்ட எனது இரண்டு வயது மகனுக்கு இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு உள்ளது. கண்களுக்கு மேல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது” என கண்ணீர் மல்க கூறி உள்ளார்.

 

மேலும் “எனது குழந்தைக்கு ராபீஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதால் தற்போது வரை ஏதும் தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் எனது குழந்தை நலமாக மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். மேலும் இனி வரும் காலங்களில் தெரு நாய்களால் இது போன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரவர் தம் குழந்தைகளை பொது இடங்களில் தனியாக விட்டுவிட்டு செல்ல கூடாது.” எனத் தெரிவித்துள்ளார். 



 

மேலும் நகரின் முக்கிய பூங்காவிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது நெய்வேலி பொது மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தெரு நாய்களால் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நெய்வேலி நகராட்சி நிர்வாகம் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாக பிடித்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும் சிறுவனின் தாய் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.