விழுப்புரம்  : விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மல்லர் கம்ப போட்டியில் சிறுவர்கள் முதல் பெண்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.


பாரம்பரிய உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலையில் ஒன்றான கம்பத்தில் மனிதர்கள் உடலை வளைத்து சுழலுவது மற்றும் கயிறு கட்டி அதில் சுழலுகின்ற இருவகையான மல்லர் கம்பம் போட்டி தமிழக அளவில் விழுப்புரம் திருவீக வீதியிலுள்ள அரசு மகளிர் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 300 க்கும் மேற்பட்ட மல்லர் கம்ப வீரர்கள் பங்கேற்றனர். மல்லர் கம்ப போட்டி 12 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமையை வெளிபடுத்தினர்.


இதில் மல்லர்கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் 10, 12, 14, 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என 5 பிரிவுகளாக நடந்தது. இதில் வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வமுடனும், உத்வேகத்துடனும் மல்லர் கம்பத்தில் ஏறி தங்கள் உடலை வில்லாக வளைத்து திறமையை நிரூபித்து அசத்தினர். இவர்களை தமிழ்நாடு மல்லர்கம்ப கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 30 நடுவர்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


கயிறு மல்லர் கம்ப போட்டியில் சிறுவர்களும், பெண்களும்  வடிவில் உடலை வளைத்து செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அழிவின் விளிம்பில் இருந்த இக்கலையை தற்போது அதிகளவில் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வருவதாக மல்லர் கம்ப விளையாட்டு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மல்லர் கம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயமும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.