விழுப்புரம் காகுப்பத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சார்ந்த பொது மக்கள் கலந்துகொண்டனர்.


விழுப்புரம் மாவட்டம், காகுப்பத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு  கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்குதல், விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், துறை வல்லுநர்களின்  ஆலோசனை வழங்குதல் மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்களை காட்சிப்படுத்துதல், முகாமில்  கலந்துகொள்ளும் ஏழை விவசாயிகளுக்கு தாது உப்புக் கலவைகள் வழங்குதல் போன்ற பணிகள் முக்கியமானதாக  மேற்கொள்ளப்படவுள்ளது.


சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நமது விழுப்புரம் மாவட்டத்திற்கு  ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் மொத்தம் 260 முகாம்கள் நடக்க உள்ளது. இதன் துவக்கமாக இன்று  16.10.2023 காகுப்பம் கிராமத்தில் இந்த முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம்களில், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான  தடுப்பூசி, ஆண்மை நீக்கம்,செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாதா அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய்  தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முகாமின்போது அறுவை சிகிச்சை சிறப்பு ஸ்கேன் வசதி மூலம் மகப்பேறியல் மருத்துவ உதவி மற்றும் மலட்டுத் தன்மை போன்ற சிகிச்சைகள்  வழங்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
 


கால்நடை பெருக்கம் (ம) தீவன அபிவிருத்தி பிரிவு தாது உப்புக் கலவையை வழங்கியது. தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தீவன கட்டுகள், விதைகள், புல் நறுக்கும் கருவிகள் முகாமில் கலந்துகொள்ளும்  ஏழை கால்நடை விவசாயிகளுக்கு வழங்க ஆவன செய்யப்பட்டது. மேலும் பசுந்தீவனங்கள் காட்சி படுத்தப்பட்டு. அதன்  விபரங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இம்முகாம்களில் நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு சேவையும் பயன்படுத்தப்பட்டது.  மேலும் விவசாயிகளுக்கு  வழிகாட்டும் வகையில் இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, கால்நடை வளர்ப்பிற்கான கடன் விண்ணப்பப் படிவம் (KCC-Kissan Credit Card ) வழங்கப்பட்டது.


விழுப்புரத்தில் பல கிராமங்களில் இம்முகாம்கள் நடத்தப்படுவதால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் மாநிலத்தின் மூலை முடுக்கிலும் கிடைக்கப் பெறுகின்றன.  சமீபத்திய அறிவியல் சம்பந்தமான  கால்நடை பராமரிப்பு நடைமுறைகள் தொடர்பான அறிவை துறை சார்ந்த வல்லுநர்களால் பொதுமக்களிடத்தில்  நேரடியாக பகிர்வதன் மூலம், கால்நடைகள் மற்றும் எருமைகளின் கருத்தரிக்கும் திறன் மற்றும் கன்று  ஈனும் விகிதத்தை கணிசமாக மேம்படுத்தி கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தி, அதன் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பை அதிகரிக்கச் செய்ய வழிவகுக்கிறது என கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,சிறந்த கறவைப் பசு பராமரிப்பு விவசாயி மூன்று நபர்களுக்கும். சிறந்த கிடேரி  கன்று வளர்ப்பு விவசாயி மூன்று நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.