Villupuram collector: இனி இப்படிதான் நடக்கும் - விழுப்புரம் புதிய ஆட்சியர் அதிரடி
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஓரணியாக செயல்பட்டு அரசின் திட்டங்களை செயல்படுத்துவோம் - ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஓரணியாக செயல்பட்டு அரசின் திட்டங்களை செயல்படுத்துவோம் என விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டுள்ள ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தின் 23வது புதிய ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே பணியாற்றிய பழனி இந்து சமய அறநிலைத்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக ஆவடி ஆணையராக இருந்த ஷேக் அப்துல் ரகுமான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்:
புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விழுப்புரம் மாவட்ட மக்களுக்கான எந்த குறைபாடாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயம் சார்ந்த தொழில்களில் கவனம் செலுத்தப்படும்.
அது தொடர்பான மக்களின் கோரிக்கை பூர்த்தி செய்யப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் சமீப காலத்தில் பேரிடர் ஏற்பட்டது. தொடர்ந்து அதற்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.
மேலும் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அரசின் ஒவ்வொரு துறையும் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள திட்டங்களை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வருவதற்கான மாவட்ட அனைத்து துறையும் ஒவ்வொரு அணியாக செயல்பட்டு மக்களின் நலனுக்காக வேலை செய்வோம். மக்கள், ஆட்சியரை எந்த நேரமும் பார்க்கலாம்.
மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் எப்போதும் அணுகலாம் என்கிற ஒரு நிலையை உருவாக்குவோம். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளின் வேலை. தொடர்ந்து குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோம். அரசு மனை பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளது தகுதியான நபர்களுக்கு மனைப்பட்ட வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.