விழுப்புரம்: அதிகாரத்தில் இருப்பதால் ஒன்றிய அரசு இந்தி வாரம் கொண்டாடுகிறார்கள் பல்வேறு மாநிலங்களின் வரி பணத்தை வைத்து செயல்படும் ஒன்றிய அரசு தமிழ் வாரம் கொண்டாட அனுமதி கொடுப்பார்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்


விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகி வந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் 200 பேர் கட்சியில் இருந்து விலகப் போவதாக அறிவித்து வந்த நிலையில் அவசர அவசரமாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

 

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது,

 

கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது

ஒரு தலைநகரம் தன் அடிப்படை வசதியை ₹2500 கோடி இருந்தால் சீரமைக்க முடியும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெள்ள நீரை போக்க நிதி ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் நகர கட்டமைப்பு சரியில்லை. போதுமான மழை பொழிவு இருந்தாலும் அது கடலில் கலக்கிறது. அதன் பின் கடல்நீரை சுத்திகரிப்பது என்பது தேவையில்லாதது. மழை நீரை சேமிக்க திட்டமிடல் இல்லை. தலைநகரே இப்படி இருந்தால் மற்ற மாநகராட்சிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள். இரு கட்சிகளும் இக்கட்டமைப்பில் தோல்வி அடைந்துள்ளதால் தொடர்ந்து வாக்களித்த மக்கள் தோற்றுக்கொண்டு வருகிறார்கள். கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது.


ஆளுநரை மாற்ற சொன்ன திமுக இப்போது பாராட்டுகிறது


ஆளுநரை மாற்ற சொன்ன திமுக இப்போது பாராட்டுகிறது. தற்போது  பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. மற்ற மாநில முதல்வர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர்களை பிரதமர் சந்தித்து உள்ளாரா? இதன் மூலமே திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது உறுதியாகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வராத பாஜக அமைச்சர் கூட்டணியில் இல்லாதபோதும் கலைஞர் நூற்றாண்டுவிழா நாணய வெளியீட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.


ஒரே மொழியை வலியிறுத்தினால் தேச ஒற்றுமை கேள்விக்குறியாகும்


இந்தியா என்பது உருவாக்கப்பட்டது. அதில் ஒரே மொழியை வலியிறுத்தினால் தேச ஒற்றுமை கேள்விக்குறியாகும். இந்தி மாதம் தூர்தர்ஷன் நடத்துகிறது. தமிழக அரசு எங்களை தமிழ் வாரம் நடத்த அனுமதிப்பார்களா? இலங்கையில் எல்லை தாண்டி வருபவர்கள் மீனவர் என்பது பிரச்சினை இல்லை. திராவிட மாடல் எல்லாத்தையும் ஒழிச்சிட்டோம் என்றால் அனைவருக்கும் மொழிபற்று வந்துவிடும் திமுகவிற்கும் மொழி போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. மொழியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக மக்களை ஏமாற்றி உள்ளது.


தமிழன் என்பது தான் பிரச்சினை. சுய மரியாதைக்காக இயக்கம் தொடங்கியவர்கள் எங்கெங்கோ விழுந்து கிடக்கிறார்கள். இறந்து போன சமஸ்கிருதத்தை உயிர்பிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கும் போது இறந்து கொண்டிருக்கும் தமிழை வாழவைக்க தமிழன் ஆள வேண்டும். அவன் தமிழனாய் இருக்க வேண்டும். பாஜக இந்தியை திணிக்கவில்லை. சமஸ்கிருதத்தை திணித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார் .