புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமார் இல்ல திருமண விழா இன்று புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,"தமிழகம், புதுச்சேரி என நான் பிரித்து பார்ப்பதில்லை. தமிழகம், புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகள் என்று தான் சொல்வது வழக்கம். திராவிட இலக்கியத்தின் தலைநகர் புதுச்சேரி தான். கழகத்தில் இருப்போரிடம் போட்டி இருந்தால் தான் கட்சி வளரும். அதே நேரத்தில் பொறாமை கூடாது. தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டு உதயசூரியன் மலர்ந்து திராவிட மாடல் என்று பெருமையோடு சொல்கிறோம். திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தேவைதான். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த ஆசை உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட அந்த வாய்ப்பு கிட்டியது. ஆனால் போய்விட்டது.


தற்போது புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் நடக்கிறது. ஆனால், மக்களுக்காக தான் நடக்கிறதா?. புதுச்சேரி முதல்வர் உயர்வானவர்தான். நல்லவர்தான். ஆனால் அடிப்பணிந்து கிடக்கிறார். வல்லவராகவும் இல்லை. ஆளுநர் ஆட்டிபடைக்கும் வகையில் புதுச்சேரியில் ஆட்சி நடப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா, அடங்கி ஒடுங்கி போய் ஆட்சி நடக்கிறது. இது புதுச்சேரிக்கு இழுக்கு. ஏதாவது நன்மை நடந்துள்ளதா இச்சூழலில் புதுச்சேரியில் திமுக ஆட்சி வர விரும்புகிறார்கள். ஏற்கெனவே திமுக ஆட்சியும், திமுக கூட்டணி ஆட்சியும் நடந்துள்ளது. நிச்சயமாக திமுக ஆட்சி மீண்டும் புதுச்சேரியில் உதயமாகும். அதேநேரத்தில் உறுதியாக மதவாத ஆட்சி புதுச்சேரியில் உருவாகி விடக்கூடாது. வரும் நாடாளுமன்றத் தேர்தல், அதைத்தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சி அமைக்கும் இலக்கோடு பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் யார் கூட்டணி, எவ்வகையில் அமையப்போகிறது என்பது அப்போது முடிவு எடுக்கப்படும். வெற்றிக்கு அச்சாரமாய் நாம் கடமையை துவக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி யார் என்ன என்பது அப்போது முடிவு செய்யப்படும், ஆனால் எந்த  தேர்தலையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.” என்று பேசினார்.