நீதித்துறை குறித்து 'யூடியூப்' சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து கடலூர் மத்திய சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரியும் சவுக்கு சங்கர் நேற்று காலை முதல் சிறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

 

இது தொடர்பாக அவர் மனு ஒன்றை சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்ததாகவும், அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளை கேட்டபோது நேற்று இரவு வரை உணவு சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டதாகவும், பார்வையாளர்கள் அனுமதிக்காதது ஏன் எனவும் தொடர்ந்து கேள்வி இருப்பதாக தெரிவித்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை சிறை வளாகத்தில் மீண்டும் சவுக்கு சங்கர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



தமிழக அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி


 




 

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார்.

 

சிதம்பரம் அருகே வரும்போது ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சரை ரயில்வே போலீசார் கார் மூலம் அழைத்துச் சென்று அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

அங்கு அமைச்சருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திகணேசன், நேரில் வந்து அமைச்சரை பார்த்து நலம் விசாரித்தார்.