விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வெங்கடேசபுரத்தில் உயிருடன் இருந்த நபரை இறந்துவிட்டதாக நினைத்து உறவினர்களுக்கு தெரிவித்து இறுதி சடங்கு செய்யவும் புதைப்பதற்கு குழி தோண்டிவிட்டு பிரிசர் பாக்ஸில் உடலை வைத்தபோது கண்விழித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

விழுப்புரம் அருகே உள்ள வெங்கடேசபுரத்தை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அரியூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் பிரகாஷ்க்கு பத்துநாட்களாக சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் வீட்டிற்கு அழைத்து சென்றிடுங்கள் ஓரிரு தினங்கள் தான் உயிரோடு இருப்பார் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிரகாஷின் சகோதரி நிலா வீட்டிற்கு அழைத்து செல்வதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் தெரிவித்து கையெழத்திட்டுள்ளார். அதன்பின் வெங்டேசபுரத்திலுள்ள உறவினர்களுக்கு பிரகாஷ் இறந்துவிட்டதாகவும், அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய நிலாவின் கணவர் கூறியதன் அடிப்படையில் உறவினர்கள் பிரகாஷ் வீட்டில் பந்தல் போட்டு உடலை வைப்பதற்கு பிரிசர் பாக்ஸ், அடக்கம் செய்வதற்கான சடங்கு பொருட்கள், மாலைகள் தயார் செய்ததோடு மட்டுமல்லாமல் சுடுகாட்டில் உடலை புதைக்க குழியும் தோண்டி வைத்து தயார் படுத்தியுள்ளார்.

இதனையடுத்து ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட பிரகாஷினை இறக்கியபோது பிரகாஷ் கண்விழித்து கை, கால்களை அசைத்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உயிரோடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பிரகாஷின் உறவினர்கள் இறக்காத நபரை இறந்துவிட்டதாக தவறாக கூறி தனியார் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி விட்டதாக களேபரம் செய்து தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரகாஷினை 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த கானை போலீசார் விசாரணை செய்தபோது மருத்துவமனையில் இறந்து விடுவார் என்பதை கூறியதை வீட்டிற்கு செல்வதற்குள் இறந்துவிடுவார் என எண்ணி உறவினர்களுக்கு இறந்துவிட்டதாக சகோதரிகளின் கணவர்கள் கூறியது தெரியவந்தது. இச்சம்பவத்தால் தோகைப்பாடி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.