விழுப்புரம் பகுதிகளில் மோட்டார் வாகன விதிகளை மீறி இயங்கிய 207 வாகனங்களுக்கு ரூ.18½ லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் உத்தரவின்படி விழுப்புரம் வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது சரக்கு வாகனம், வேன், ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனம், மினி லாரி, லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான் (ஏர் ஹாரன்) பயன்படுத்துதல், ஓட்டுனர் உரிமம், காப்பீட்டு சான்று, தகுதிச்சான்று இன்றி வாகனங்களை இயக்குதல் என பல்வேறு மோட்டார் வாகன விதிகளை மீறிச்சென்ற 207 வாகனங்கள் கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் அனைத்திற்கும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டதோடு ரூ.18 லட்சத்து 42 ஆயிரத்து 490 அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும் இந்த வாகனங்களுக்கு வரியாக ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்து 90 வசூலிக்கப்பட்டதோடு, விதிக்கப்பட்ட அபராத தொகையில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்திற்குள் சட்டத்திற்கு புறம்பாகவும், விதிகளை மீறியும் இயங்கி வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த 100 வாகனங்களுக்கு ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் அபராத தொகை நிர்ணயம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதே போல் தகுதிச் சான்று, அனுமதிச் சீட்டு காலாவதியான நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட ஒரு தனியார் பள்ளி வாகனம், ஒரு வேன், 3 ஷேர் ஆட்டோக்கள் என 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த வாகனங்களை விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்தனர். இந்த வாகனங்களுக்கு விரைவில் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்