விழுப்புரம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "மழை, வெள்ள நிவாரணநிதி வேண்டி அனைத்துக்கட்சி குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பிவைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது. இக்குழு ஆய்வு செய்த இக்குழு 10 நாட்கள் கடந்தும் மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை அளிக்கவில்லை. எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியக்குழு ஆய்வுக்கு பின்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


மாநில பேரிடர் நிவாரண நிதி 946 கோடி ரூபாயில் செலவிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கும்வரை காத்திருக்க இயலாது. இன்னும் முழுமையான கணக்கெடுப்பை முடித்து விரிவான அறிக்கையுடன் முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து நிதி வழங்க வலியிறுத்த வேண்டும். 


விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ₹30 ஆயிரம் செலவாகக்கூடிய நிலையில் ₹6800 என்பதை ஏற்கமுடியாது. ஏக்கருக்கு ₹ 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்கவேண்டும். பின் மத்திய அரசு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அறிவிக்கப்பட்ட நிதியைக்கூட மாநில அரசு வழங்க மறுக்கிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 6 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 6 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.


தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதாக ஆட்சிக்கு வந்த திமுக கடன் வாங்குவதிலும், வட்டி கட்டுவதில் முதன்மை மாநிலமாக திக்ழ்கிறது. 8.34 லட்சம் கோடி கடனுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. வட்டி கட்டுவதில் தற்போது ரூ 54676 கோடியுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது . இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசு திவாலாகிவிடும். 


தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் தமிழ் கட்டாயப்பாடம் என சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகள் கடந்தும் அதை அமல்படுத்த முடியவில்லை. இச்சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றம் சென்றும், இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க தமிழக அரசு வலியிறுத்தவில்லை. இது தமிழுக்கு திமுக செய்யும் துரோகமாகும். 


தமிழகத்தில் 26 இடங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. மணலுக்கு மாறாக செயற்கை மணல் மற்றும் இறக்குமதி மணலை கொண்டுவர முயற்சிக்கவேண்டும். தமிழகத்தில் கௌரவ பேராசிரியர்களுக்கு ரூ 25 ஆயிரம் போதுமானதல்ல ரூ 50 ஆயிரம் வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ 6 ஆயிரம் வழங்குவது நியாயமல்ல. இவ்வாறு அவர் கூறினார்


தொடர்ந்து, ஒரேநாடு ஒரே தேர்தல் என நடத்தப்பட்டால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும்போது அந்த ஆட்சி சில மாதங்கள் மட்டுமே இருக்கும். இதை பாமக ஏற்காது. அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டதா எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைத்து கட்சிகளும் அம்பேத்கரை போற்றித்தான் ஆகவேண்டும். அவரை கொச்சைபடுத்தியோ, அவமதிப்பதை ஏற்க முடியாது. ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலையை நான் திறந்தேன். அம்பேத்கர் இல்லை என்றால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. அம்பேத்கரை விமர்சிப்பதை யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. மது விலக்கு என்ற துறையை வைத்துக்கொண்டு மது விற்பனையை அதிகரிக்கிறார்கள். அந்த துறையை எடுத்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.