புதுச்சேரி ஜிப்மரில் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க அனைத்து துறை டாக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக தொற்றா நோய்களான நீரிழிவு, மனநலம் பாதிப்பு, இதய நோய், சிறுநீரக பிரச்னை, நரம்பு பிரச்சனை மற்றும் புற்று நோயாளிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து, மாத்திரைகளை ஜிப்மர் நிர்வாகம் நிறுத்தியது. இதனால் பல பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சமீபகாலமாக புற நோயாளிகளுக்கும் , மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்த வருகின்றனர். இதனால், ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் ஏழை நோயாளிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.


இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகத்திற்கு புகார்கள் குவிந்தன. அதனைத் தொடர்ந்து, கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்யுமாறு ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நோயாளிகளுக்கு, ஜிப்மர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரையுங்கள். இங்கு இல்லாத அத்தியாவசிய மருந்தை வெளியில் வாங்கி கொள்ளுமாறு குறிப்பிட்டு தனிச்சீட்டில் எழுதி தர கூறியுள்ளார். இந்த சுற்றறிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது என்ற குற்றச்சாட்டு உண்மை என உறுதி செய்துள்ளது.


இதுகுறித்து பாமக நிறுவனர் ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஜிப்மர் தான் உயிர்காக்கும் மருத்துவமனையாக திகழ்கிறது.






அங்கு மருத்துவத்திற்காக வரும் அனைவருக்கும் அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுவதை ஜிப்மர் நிர்வாகமும், அரசும் உறுதி செய்ய வேண்டும். ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த இரு ஆண்டுகளாகவே மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மருத்துவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


பாமகவின் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, அதற்கு தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தான் மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும். புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாடு லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும். ஏழைகளுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய ஜிப்மருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அங்கு நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.