புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-20ல் நிலுவை கடன், கடன் பொறுப்புகள் 9,449 கோடி ரூபாயாக இருந்தது. இந்த கடன் 2023-24ல் 13 ஆயிரத்து 84 கோடி ரூபாயாக உயர்ந்தது.

Continues below advertisement

பட்ஜெட் மீதான இந்திய தணிக்கை அறிக்கை

புதுச்சேரி அரசின் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் மீதான இந்திய தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரியின் தணிக்கை அறிக்கை மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டது.

அதனை, வெளியிட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி கூறியதாவது:

Continues below advertisement

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019-20ல் நிலுவை கடன், கடன் பொறுப்புகள் 9,449 கோடி ரூபாயாக இருந்தது. இந்த கடன் 2023-24ல் 13 ஆயிரத்து 84 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் நிலுவையில் உள்ள கடன்களின் வளர்ச்சி 2019-20ல் 3.41 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 3.51 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2023-24 பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீடு 12,613.26 கோடி ரூபாயாக இருந்தது. இதில், 11,494.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதன் விளைவாக 1,119.91 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டது. இது மொத்த ஒதுக்கீட்டில் 8.87 சதவீதம். இருப்பினும் கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்த சேமிப்பில் 363.26 கோடி ரூபாய், அதாவது 32.46 சதவீதம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது.

2023-24 காலக்கட்டத்தில் 50 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட 22 மானியங்கள், நிதி ஒதுக்கங்களில் திரண்ட துணை நிலை மானிய ஒதுக்கீடான 973.93 கோடி ரூபாயில் 613.34 கோடி ரூபாய் மிகையானது என்று நிரூபணமானது. மேலும், 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்குமேற்பட்ட 16 மானியங்களை பொருத்தவரை முதல்நிலை மானிய ஒதுக்கீட்டிலேயே 22.33 கோடி ரூபாய் சேமிப்பு இருந்தது. இதனால் வழங்கப்பட்ட துணைநிலை ஒதுக்கீடு முழுவதுமாக தேவையற்றது என்று நிரூபணமானது.

பணம் இழப்பு மற்றும் பணம் கையாடல்

ஒரு கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட 27 மானியங்கள், நிதி ஒதுக்கங்களில் 1061.47 கோடி சேமிப்பு ஏற்பட்டது. இந்த சேமிப்பில் 745.07 கோடி ரூபாய் அதாவது 70.19 சதவீதம் ஒப்படைக்கப் படவில்லை. கடந்த 2024 மார்ச் வரை புதுச்சேரி அரசுக்கு முறைகேடு, பணம் இழப்பு மற்றும் பணம் கையாடல் செய்ததாக 316 சம்பவங்கள் நேரிட்டுள்ளன. இதில் அரசின் அனைத்து துறைகளையும் சேர்த்து மொத்தம் 28.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் புதுச்சேரி மின்வாரியத்தில் மட்டும் 257 சம்பவங்கள் நேரிட்டுள்ளன. இதில் அரசுக்கு இந்த துறையில் மட்டும் 27.14 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 257 நேர்வுகளில் நடந்துள்ளது. இந்த தணிக்கை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை பொதுகணக்குக் குழு கூடி இப்பிரச்னையில் விவாதித்து நடவடிக்கை எடுக்கும் என திருப்பதி வெங்கடசாமி கூறினார்.