தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நாளை வடமேற்கு திசையில் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 4 நாட்களுக்கு பரவலாக மிதமான முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.


இந்தநிலையில் புதுச்சேரியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். மேலும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் அலை சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.


பிள்ளைச்சாவடி கிராமத்தில் தூண்டில் முள் வளைவு அமைக்காததால் ஏற்கனவே இரு சாலைகள், 100 தென்னை மரங்கள், 100 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மக்களின் தொடர் போராட்டத்தால் இங்கு கல் கொட்டும் பணி நடந்தது. 300 அடி தூரம் கல் கொட்டி சாலை அமைக்கும் சூழலில் காலை முதல் அலை சீற்றத்திற்கு அவை கடலுக்குள் இழுத்து செல்லப்படுகின்றன. மேலும் இன்று 5 குடிசை வீடுகளும் 5 தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. சாலையோர மின் கம்பங்கள், குடியிருப்பு பகுதியில் இருந்த குடிநீர் குழாய்களும் அடித்துச் செல்லப்பட்டன. அரசு சார்பில் கட்டித்தந்த மீன்வலை காப்பகத்தின் தரைத்தளத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து அலை சீற்றம், கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.