தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, இதேபோல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டமும் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.மேலும் தங்கள் குறைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து இருக்கும் புகார் மனு பெட்டியில் போடுமாறு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கடந்த சில வாரங்களாக புகார் பேட்டியல் மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடக்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில் விருத்தாச்சலம் வட்டம் வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பல வருடங்களாக வசித்து வரும் தங்களை தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பணிகளை காரணம் காட்டி சட்டவிரோதமாக எங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் அருந்ததியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்கள் பல வருடங்களாக வசித்து வரும் நிலையில் சட்ட விரோதமாக அப்புறப் படுத்த முயலும் நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களை வெளியேற்ற வேண்டும் என்றால் எங்களுக்கு மாற்று இடம் மற்றும் மறுவாழ்வு சட்டங்களுக்கான சலுகைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்திட வேண்டும், ஆனால் அதற்கு முன்பாக தற்போது நில கையகப்படுத்தும் சட்டத்தின் படி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் எங்களை அச்சுறுத்தி வெளியேற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினர்.
ஆனால் வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் வசிக்கும் பட்டா தாரர்களுக்கு இதுவரை நில கையகப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வழங்கப்படவில்லை. எனவே பட்டா இல்லாத மக்களை மட்டும் தனிமைப்படுத்தி வெளியேறும்படி என்எல்சி நிறுவனம் மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னரே இது சம்பந்தமாக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனி சார் ஆட்சியரிடம் (நில எடுப்பு) மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதித்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.