விழுப்புரம்: பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுமெனவும், தமிழகத்திற்கு யார் வந்தாலும் திராவிட கட்சியின் கூட்டணியை முறித்து விடமுடியாதென்று முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் வழுதரெட்டியிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திமுக கழக துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தார் என்றும் தமிழகம் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.


தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் இல்லம் தோறும் சென்று மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதா, பெண்களுக்கு கல்வி பயில மாதந்தோறும் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறதா என முதலமைச்சரின் திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழகத்திற்கு யார் யாரோ வருகிறார்கள், யார் வந்தாலும் திராவிட கட்சியின் கூட்டணியை முறித்து விடமுடியாதென்றும்


நாடாளுமன்ற தேர்தல் நமக்கு சவாலாக எடுத்து கொண்டு அனைத்து திமுக வேட்பாளர்களை வெற்றி செய்ய வேண்டும் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை புரிந்து தமிழகம்  முதலிடத்தில் இருப்பதாக அவரே மறைமுகமாக தெளிவாக கூறி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். பாஜக தமிழகத்தில் காலுன்ற முடியாத நிலையில் மோடியை அழைத்து வந்துள்ளதாகவும் தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு இந்தியை புகுத்த வேண்டுமென மோடி செயல்படுவதாகவும் அவர் எத்தனை முறை தமிழக வந்தாலும் 40 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் கூட்டணி உடன்படிக்கை சுமுகமாக  நடைபெற்று கொண்டிருப்பதாக பொன்முடி கூறினார்.