விழுப்புரம்: Auroville ஆரோவில்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்டு பொங்கலிட்டு கும்மியடித்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர்.
தை திருநாள் பொங்கல் விழா
தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் விழா இன்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டுதோறும் கொண்டாடினாலும், எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே உண்டு. ஜாதி, மத பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றால் அது மிகையில்லை. காரணம், பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட கடவுளையோ, மதத்தையோ அல்லது மத குருவையோ மையமாக கொண்டதாக இருக்கும்.
ஆனால், உழைப்பையும், இயற்கையையும் வழிபடுவதை மையமாக வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டும்தானே, உழைப்பை போற்றுவதற்கும், இயற்கையை வணங்குவதற்கும் ஜாதி, மத பேதம் ஏது? இதனால்தான் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவ்வளவு ஏன், உலகம் முழுவதுமே கொண்டாடப்படுகிறது இந்த பொங்கல் பண்டிகை.
ஆரோவில்லில் கும்மியடித்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டினர்
அந்த வகையில், ஆரோவில்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்டு பொங்கலிட்டு கும்மியடித்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர். மண்பானையில் பொங்கலிட்டு இயற்கைக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பாரம்பாரிய கலாச்சார பொங்கல் விழாவானது ஆரோவில் அறக்கட்டளை சார்பாக ஆரோவிலுள்ள மோகனம் கலாச்சார பண்பாட்டு மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமன வெளிநாட்டினர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிடும் போது பொங்கல் பானையை சுற்றி வந்து கும்மி அடித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லர் கம்பர் கயிறு ஏறுதல், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகள் நடைபெற்றதை வெளிநாட்டினர் உற்சாகமாக கைதட்டி உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
கோயில்களில் சிறப்பு வழிபாடு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் காலை முதலே புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் காணப்பட்டனர். கோயில்களில் காலை முதலே சிறப்பு வழிபாடுகளும், கொண்டாட்டங்களும் நடைபெற்றது. திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, சமயபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனத்திற்கு குவிந்தனர். பொங்கல் பண்டிகை காரணமாக கிராமங்கள்தோறும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வைணவ தலங்களிலும் பக்தர்கள் குவிந்தனர். திருச்சி ஸ்ரீரங்கம், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.