புதுச்சேரி: புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் 3 பேருக்கு விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


ஜவகர் நகர், உழவர்கரை பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டம் வழியாக, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கனகன் ஏரியை ஒட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை வந்தடைகிறது. அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு கனகன் ஏரி வாய்க்காலில் விடப்படுகிறது. இதனிடையே சில மாதங்களாகவே ரெட்டியார்பாளையம் புதுநகரில் உள்ள வீடுகளில் விஷவாயு கசிவு ஏற்படுவதை உணர்ந்த மக்கள் கனகன்ஏரி கழிவுநீர் வாய்க்கால் சுத்திகரிப்பு நிலையம் சென்று ஒப்பந்ததாரரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரரோ, துறை அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை. 


மூச்சுத் திணறல்


இந்நிலையில், நேற்றுமுன் தினம் காலை 7 மணியளவில் ரெட்டியார்பாளையம் புதுநகர், 4வது தெருவில் உள்ள பொதுமக்கள் அவரவர் வீடுகளில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டி, மாணவி உட்பட 5க்கும் மேற்பட்டோரை விஷவாயு தாக்கவே, மூச்சுத்திணறி கழிவறைக்குள்ளேயே மயங்கி கிடந்துள்ளனர். அவர்களை மீட்க சென்றவர்களில் சிலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர். தகவலறிந்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், ரெட்டியார்பாளையம் போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வீடுகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். லேசான மயக்க நிலையில் இருந்தவர்களுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. வெளிநபர்கள் யாரும் அங்கு நுழையாதபடி கயிறுகளை கட்டி தடுப்புகளை அமைத்தனர்.


விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு 


இதனிடையே வீடுகளில் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பிளஸ்1 மாணவி செல்வராணி (15) மற்றும் செந்தாமரை (79), இவரது மகள் காமாட்சி (55) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 பெண்கள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரி கேள்வி எழுப்பினர்.


3 தெரு மக்கள் வெளியேற்றம், வீடுகளில் சமைக்க தடை 


ரெட்டியார்பாளையம் புதுநகரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலியான நிலையில், வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என்பதால் ஒலிபெருக்கி வாயிலாக முன்னெச்சரிக்கை விடப்பட்டு 3 தெரு மக்களும் வெளியேற்றப்பட்டு தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அனைவரும் ஒரே இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. மறுஉத்தரவு வரும் வரை 3 தெருவில் வசிப்பவர்களும் வீடுகளில் சமைக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அப்பகுதியில் 20 மருத்துவர்கள் வந்து பொதுமக்களை வீடு வீடாக சென்று பரிசோதனை செய்தனர். இதில் சிலருக்கு கண் எரிச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


புதுநகர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றும் நிலையில் அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


 ரூ.70 லட்சம் நிவாரணம் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "விஷவாயு பரவாமல் தடுக்க ரெட்டியார்பாளையம் பகுதி மட்டுமின்றி புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்படும். விஷவாயு தாக்கி பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சம், மற்ற இரண்டு பெண்களுக்கு தலா ரூ.20 லட்சம் என 3 பேரின் குடும்பத்துக்கு, ரூ.70 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.