புதுச்சேரியில் வழக்கமாக இரவு 11 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற 31.12.2024 அன்று உணவகத்துடன் கூடிய மது கடைகள், ரெஸ்டோ பார்கள் மற்றும் திறந்தவெளி மதுபான கொண்டாடங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை செயல்பட கலால்துறை அனுமதியளித்துள்ளது.
சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு பிறக்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி இப்போதே தயாராகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து புத்தாண்டு வரை ஒரு வார காலத்திற்கு புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, புதுவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பீச் ரெசார்ட்டுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஓட்டல்களில் உள்ள அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் புதுச்சேரியில் களைகட்டத் தொடங்கி உள்ளது.
மேலும் டிசம்பர் 31-ந் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் மூலம் பிரபலங்கள் பங்கேற்க கூடிய இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அளவில்லாத அசைவ உணவுடன் மது பானங்களும் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவும் தொடங்கியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி புதுச்சேரி நகர பகுதிகளான அண்ணாசாலை, நேருவீதியில் மின்விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் அந்த வீதிகள் மின்னொளியில் ஜொலிப்பது பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது.
புதுச்சேரியில் வழக்கமாக இரவு 11 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற 31.12.2024 அன்று உணவகத்துடன் கூடிய மதுக்கடைகள், ரெஸ்டோ பார்கள் மற்றும் திறந்தவெளி மதுபான கொண்டாடங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை செயல்பட கலால்துறை அனுமதியளித்துள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்க கடற்கரையில் கொண்டாட்டம் நடப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி சத்தியசுந்தரம் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் டிஐஜி கூறியதாவது: புத்தாண்டு தினத்தின் முதல் நாளில் கடற்கரை சாலை செல்லும் ஒயிட் டவுன் பகுதி சாலைகள் முழுவதும் வாகனங்கள் தடை செய்யப்படும். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு 6 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஒயிட் டவுன் பகுதியில் வசிப்பவர்கள் தடையின்றி செல்வதற்கு காவல்துறை சார்பில் அடையாள அட்டை (பாஸ்) வழங்கப்படும்.
அதன்படி, அடையாள அட்டைக்குரியவர்களது வாகனங்கள் மட்டுமே ஒயிட்டவுனுக்குள் அனுமதிக்கப்படும். வரும் புத்தாண்டில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கடற்கரை சாலையில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அங்கு உயர்கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருபவர்கள் கடலில் இறங்கி குளிப்பதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் கடலோர காவல்படை போலீஸார் நிறுத்தப்படவுள்ளனர். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து கடற்கரைகளிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
கூட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் 3 பசுமைப்பகுதிகள் அமைத்து, அங்கு மீட்புப் பிரிவு, தீயணைப்புப் பிரிவு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. தனியார் விடுதிகள் அரசிடம் அனுமதி பெற்ற நேரங்களில் மட்டுமே புத்தாண்டின் போது செயல்படுகிறதா என்பதையும் கண்காணிப்போம் என்று தெரிவித்தார்.