கடலூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ. 2 ½ லட்சம் மதிப்புள்ள போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி பகுதியில், மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி விஜிகுமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில், ஏட்டு பழனிவேல் மற்றும் கவிராஜா, கணபதி, மணிகண்டன், பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பல வாணன்பேட்டை பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள வெள்ளகண்ணு மகன் ஏழுமலை (45) என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 35 அட்டைப்பெட்டிகளில் 1680 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஏழுமலை மற்றும் கடலூர் அருகே உள்ள சமட்டிக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ராஜா (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மதுபாட்டில்கள், புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்கள் போல ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, தமிழக பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, போலி மதுபாட்டில்கள் என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ. 2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அன்பழகன், குமரன், சபாபதி, தனசேகர், மும்மூர்த்தி ஆகிய 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்