விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சாரதி என்பவருடைய ஏழு வயது குழந்தை ராஜேஸ்வரி, இவர் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் விளையாடி கொண்டு இருந்த 7 வயது சிறுமியை திடீரென காணவில்லை, இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் எங்கு தேடி பார்த்தும் கிடைக்காததால் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 



 

 

பின்னர் புகாரை பெற்று கொண்ட பண்ருட்டி காவல் துறையினர் பண்ருட்டி நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அப்பொழுது குழந்தை பண்ருட்டி மைய பகுதி வழியாக நான்கு முனை சந்திப்பு சாலையை கடந்து சொந்த ஊரான திருவெண்ணெய்நல்லூர் செல்லும் பண்ருட்டி மார்கெட் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை தேடி பார்த்ததில் அவர் திருவதிகையில் இருந்து 7 கிலோ மீட்டர் அடுத்த மணப்பாக்கம் எனும் கிராமத்தில் சாலை ஓரம் தொடர்ந்து நடந்து சென்று கொண்டு இருந்த போது பண்ருட்டி காவல் துறையினர் குழந்தையை மீட்டனர். 

 



 

பின்னர் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்தனர், இந்த நிலையில் குழந்தையிடம் நடந்து சென்றது குறித்து விசாரித்ததில் குழந்தை ராஜேஸ்வரி திடீரென தனது தாயின் ஞாபகம் வந்து விட்டது எனவும், அதனால் யாரிடமும் கூறாமல் நடந்தே வீட்டை விட்டு சென்று விட்டேன் என்று குழந்தை தெரிவித்து உள்ளார். மேலும் குழந்தை வீட்டை விட்டு வெளியேறியது குறித்து பண்ருட்டி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்தி வருகின்றனர்.

 



 

திருவதிகை போன்ற ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இருந்து குழந்தை வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று காணாமல் போன ஏழு வயது குழந்தையை வேகமாக செயல்பட்டு, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து மூன்று மணி நேரத்தில் காவல் துறையினர் குழந்தையை மீட்டு உள்ளனர், காவல் துறையின் இந்த துரித நடவடிக்கையை அந்த பகுதி மக்கள் பண்ருட்டி காவல் நிலைய காவல் துறையினரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.