புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவைக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்தி எதிர்ப்பு, நிதி நெருக்கடி, ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி தலையீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப் போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளனர். இதில் இருதரப் பினருடையே எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழா வண்ணம் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அமித்ஷா கருத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திரித்து தவறான தகவலை கூறிவருகின்றனர். 2014-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருந்தால்தான் இந்திய நிர்வாகம் செம்மைப்படும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது இந்தியைப் பற்றி காங்கிரஸ் பேசுவது வியப்பாக உள்ளது.
கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலத்தில் எந்த திட்டத்தையும் செயல் படுத்தாமல் மாநிலத்தின் உள்கட்ட அமைப்பு வசதிகளை செய்யாமல் புதுவையை பாலைவனமாக்கினர். இதற்கு நிதி நெருக்கடி என காரணம் காட்டினர். இவர்களது ஆட்சியில் மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ததோ அதையேதான் தற்போதும் செய்து வருகிறது.தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் ரங்கசாமி 10 மாதத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார்.
கடந்த காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு இப்பொழுதும் அதே அளவில் தான் உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் செயல்பாடு இதற்கெல்லாம் செயல்படுத்த திறமையும், நல்ல மனமும் இருந்தால் போதும் அது எங்கள் கூட்டணி அரசின் முதலமைச்சருக்கு உள்ளது. ஆனால், கடந்த காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின் முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு திறமையும், நல்ல மனதும் இல்லை. மத்திய அரசுடன் தொடர் மோதல் போக்கு ஒன்றையே தனது ஒரு அம்ச கொள்கையாக எடுத்துக் கொண்டார்.
கடந்த காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி என்பது மாநிலத்தின் இருண்ட ஆட்சி என்பதை மறந்து விட்டு தற்போது நல்லாட்சி நடத்தும் எங்கள் கூட்டணி அரசை விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. அரசில் பாரதிய ஜனதா கட்சி தலையீடு இருப்பதாக எதிர்கட்சிகள் குறை கூறுகின்றன. நடப்பது பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி. இந்த கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி தலையீடு இருக்கக் கூடாது என மற்றவர்கள் பேசுவது விந்தையாக இருக்கிறது. மாநில நிர்வாகத்தில் கவர்னர் தலையீடு, நிதி நெருக்கடி உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் இன்று வரை முதலமைச்சர் மத்திய அரசையும், ஆளுநரையும் குறை கூறாத நிலையில் எதிர்க்கட்சிகள் குழப்பதை ஏற்படுத்தும் விதமாக பேசிவருவது கண்டிக்கது என அவர் கூறினார்.