உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர்  டாக்டர் சி.பழனி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், கொங்கராயனூரில், கொங்கராயனூர் - விழுப்புரம் இடையே புதிய பேருந்து சேவையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்...


கொங்கராயனூர், பையூர் என்னோட சொந்த ஊர் மாதிரி இந்த ஊரிலிருந்து தான் கல்வி பயிலும் போது ஆசிரியர்கள் நடந்தே வந்து பாடம் எடுத்து இருக்கிறார்கள். கிராமபுற பகுதிகளுக்கு குடிநீர் வசதி சாலைகள் சரி செய்து தர வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டு இருப்பதால் தான் அவைகள் எல்லாம் சரி செய்து கொடுத்து வருகிறோம். 20 மாதகால ஆட்சியில் எல்லாம் செய்து வருகிறோம் படிப்படியாக அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் மக்கள் மனுவாக கொடுத்தால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்போம் என்றும் அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு சென்றால் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்க உத்தரவிட்ட உலகத்திலையே ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் இது தான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார்.


மேலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்போம் கூறியிருக்கிறார். அதில் ஆளுநர் பேசுகிறாரே தவிர காது கொடுத்து கேட்பதில்லை என்று கூறியிருக்கிறார். ஆளுநரை காதால் கேட்க வைத்திருக்கிற முதலமைச்சர் இதில் விரைவில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என அமைச்சர் பொன்முடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும்,  தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றம் பெற்றிட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கிராமங்களிலிருந்து நகர்பகுதிக்கு செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான நிதியினை அதிகளவில் ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். இதன் மூலம், கிராமங்களில் சாலை வசதி மற்றும் கிராமங்களிலிருந்து நகர்பகுதிக்கு செல்ல புதிய பேருந்து சேவை மற்றும் கூடுதல் பேருந்து வசதி போன்றவை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில், கொங்கராயனூர் - விழுப்புரம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விழுப்புரத்திலிருந்து கொங்கராயநல்லூருக்கு இரண்டு எண்ணிக்கையிலான பேருந்து சேவை இருந்து வந்தது, தற்பொழுது, கூடுதலாக மூன்று எண்ணிக்கையிலான பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொங்கராயனூர்சாலையானது ஒன்றிய சாலையாக இருந்து வந்ததால் போதுமான நிதி ஆதாரம் பெற இயலவில்லை. தற்பொழுது நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பகுதியில், மேலும் இரண்டு பாலங்கள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுமட்டுமல்லாமல் கொங்கராயனூர், பையூர்,  மாரங்கியூர் போன்ற சில கிராமங்கள் முகையூர் ஒன்றியத்தில் உள்ளதால் இக்கிராமங்களை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் மாற்றுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.


புதிய பேருந்து சேவை மூலம், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உரிய நேரத்தில் நகர்பகுதிக்கும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய தீர்வு கண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தகுதியான பயனாளிகளுக்கு படிப்படியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர் நிகழ்வாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 1 பயனாளிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின்கீழ், 20 பயனாளிகளுக்கு ரூ.5,20,580/- மதிப்பீட்டில் வீடுகட்டுவதற்கான பட்டியல் தொகை விடுவித்தலுக்கான ஆணையும், வருவாய்த்துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டையும், 10 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 2 பயனாளிகளுக்கு ரூ.24,000/- மதிப்பீட்டில் முதியோர் ஓய்வூதியத்தொகையும், 8 பயனாளிகளுக்கு ரூ.96,000/- மதிப்பீட்டில் விதவை உதவித்தொகையும், வேளாண்மைத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு ரூ.18,413/- மதிப்பீட்டில் மின்கலன் தெளிப்பான், பண்ணை கருவிகள் மற்றும் தார்பாயும், தோட்டக்கலைத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு ரூ.28,500/- மதிப்பீட்டில் வெண்டை விதை மற்றும் கொய்யா செடியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,06,000/- மதிப்பீட்டில் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலியும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,840/- மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 3 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,050/- மதிப்பீட்டில் மூன்று சக்கர நாற்காலியும், 3 மாற்றுத்திறனாளிக்கு ரூ.785/- மதிப்பீட்டில் ஆக்ஸிலரி ஊன்றுகோல் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.8,29,838/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசானது மக்களின் அரசாக உள்ளதால், கோரிக்கை மனு வழங்கும் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைத்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, தங்களுடைய கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றித்தரப்படும். மேலும், நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள் நல்ல முறையில் இதனை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.