விழுப்புரம் : செஞ்சி அருகேயுள்ள ஆனாங்கூர் இருளர் சமூகத்தை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் துணை ஊராட்சி மன்ற தலைவியும் அவரது கணவரும் தடுப்பதாக கூறி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவி தர்ணாவில் ஈடுபட்டார். 


 


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆனாங்கூர் ஊராட்சியில் பழங்குடியின இருளர் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின வாக்காளர் 50 பேர் உட்பட 750 வாக்காளர்களை கொண்ட ஆனாங்கூர் ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு அதே கிராமத்தை சேர்ந்த மறைந்த ஏழுமலை என்பவரின் மனைவியான சங்கீதா(40) என்பவர் தேர்தலில் போட்டியிட்டு 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக முறையாக பதவியேற்றுக்கொண்டார். ஆறு வார்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆனாங்கூர் ஊராட்சியில் சித்ரா என்பவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்நிலையில் பழங்குடியின பெண் ஊராட்சி மன்ற தலைவரான சங்கீதாவை ஊராட்சி நிர்வாகத்தை செய்யவிடாமல் துணைத் தலைவர் சித்ரா மற்றும் அவரது கணவரும், திமுக கிளை செயலாளருமான குணசேகர் ஆகியோர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திய வந்ததாக கூறப்படுகிறது.


பெண் ஊராட்சி மன்ற தலைவர் பட்டியலினத்தை சேர்ந்த சங்கீதாவை நாற்காலியில் அமர வைக்காமல் அவமதிப்பு செய்ததாகவும், ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவிடாமல் தடுத்து வந்துள்ளனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அவமதிப்பு நடைபெற்ற வந்த நிலையில் நாளுக்கு நாள் இவர்களுடைய இடையூறு அதிகரித்து பொதுமக்கள் முன்னிலையில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாவை அவமரியாதையாகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசி அசிங்கப்படுத்தியதாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா புகார் தெரிவித்துள்ளார். 


 


இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரான சங்கீதா மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டதால் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சங்கீதா கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து சாதிய வன்கொடுமையில் ஈடுபடும் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் அவரது கனவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.


ஒருமணி நேரத்திற்கு மேலாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராடாத்தை கைவிட்டார். இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் போராட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றதால் பரபரப்பை ஏற்படுத்தியது.