விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கொட்டும் மழையில் திமுக அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  கிராம மக்களை ஆபாசமான வார்த்தைகளில் அமைச்சர் பொன்முடி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க அமைச்சர் பொன்முடியின் உத்தரவின்பேரில் வருவாய் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்குட்பட்ட இந்த சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் அமைச்சர் பொன்முடியின் அழுத்தம் காரணமாக சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தலிங்கமடம் கிராமத்தில் இன்று நடைபெற இருந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கடையடைப்பு நடத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட சித்தலிங்கமடம் கிராம மக்கள் மறுத்துவிட்ட நிலையில் இது குறித்து தகவலறிந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த  அமைச்சர் பொன்முடி சித்தலிங்கமடம் கிராமத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாக வந்திருந்தார்.


அப்போது அமைச்சர் பொன்முடியை கொட்டும் மழையிலும் கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அப்போது சாமாதானம் செய்யும் முயற்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அமைச்சர் பொன்முடி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் கிராம மக்கள் விடாப்பிடியாக அமைச்சரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் ஆத்திரமடைந்த அமைச்சர்  ஒரு கட்டத்தில் கிராம மக்களிடம் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்த்து தனது கோபத்தை வெளிப்படுத்தியாதாக கூறப்படுகிறது.


இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கிராம மக்களிடம் இருந்து அமைச்சர் பொன்முடியை போலீசார் பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு பேருந்துகளில் ஓசி பயணம் செய்கிறீர்கள் என அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையானது. தனது தொகுதி மக்களிடமே அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக பொது வெளியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி தனது அதிகார தோரணையை அமைச்சர் பொன்முடி வெளிப்படுத்தியுள்ளார் என  கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.