விழுப்புரம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு செமஸ்டருக்கான தேர்வு கட்டணம் உயர்த்தபடாது எனவும் வரக்கூடிய ஆண்டு முதல் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் வசூலிப்பதற்காக துணைவேந்தர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


விழுப்புரம் சண்முகாபுரத்திலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, தனியார் பல்கலைக்கழகமாக இருந்தபோது, அப்போது பணியில் சேர்ந்த 56 பேர் தகுதி குறைவாக இருந்தவர்கள். 2019 ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டதின் பேரில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்” என்றார்.


மேலும், யூஜிசி நிர்ணயித்த 55 சதவிகிதம் அவர்களுக்கு தகுதி இல்லை என்பதால் துணைவேந்தர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை வரவேற்பதாவும் தகுதி குறைவாக பணியில் அமர்த்தபட்டது  குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.


வருங்காலங்களில் 56 பேர்களில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்களின் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க வாய்ப்பு அளிக்கப்படுமெனவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த செமஸ்டர் தேர்விற்கான கட்டணம் உயராது என்றும் தேர்வு கட்டணம் உயர்வு என்பது நடைமுறைபடுத்தபடாது கூறினார். அடுத்த ஆண்டு முதல் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு துணை வேந்தர்களை அழைத்து  பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக, பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக்கொண்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு உடைமையாக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா ஊழியர்களின் தகுதி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


தொடர்ந்து அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் தகுதிகள் பரிசோதிக்கப்பட்டு வந்தன. இதில் மேலாண்மைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையில் பணியாற்றும் 56 பேராசிரியர்கள் அரசு தகுதி விதிமுறைகளின்படி பணியில் சேராமல், பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.


இவர்கள் மீது ஆட்சி மன்றக் குழு மற்றும் உயர் கல்வித்துறையின் அறிவுரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலை பதிவாளர் டாக்டர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். அரசு விதிகளின்படி அவர்களின் நியமனம் மேற்கொள்ளப்படாததால், தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.


56 பேருக்கு பணிநீக்க உத்தரவு


பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றி வரும் 18 பேருக்கு பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பணி நிரவலில் சென்று வெளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கு கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல 92 பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 


இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி, பல்கலை. வளாகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 56 உதவிப் பேராசிரியர்கள் கூண்டோடு நீக்கப்பட்ட சம்பவம், சிதம்பரம் பகுதியில் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது. 


அண்ணா பல்கலைக்கழகம்- தேர்வு, சான்றிதழ் கட்டணம் 50% உயர்வு


இளங்கலை  செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு இன்டர்னல் தேர்வுக்கு – ஒவ்வொரு தாளுக்கும் தலா ரூ.150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம், ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளங்கலை ப்ரொஜெக்ட் தீசிஸ்-க்கு தேர்வுக் கட்டணம் 300 ரூபாயாக இருந்தது. தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


அதேபோல முதுகலை செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு, இன்டர்னல் தேர்வு, மினி ப்ரொஜெக்ட், கோடைக்கால ப்ரொஜெக்ட் ஆகிய அனைத்துக்கும் தாள் ஒன்றுக்கு முன்பு தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்தது. அது தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல முதுகலை ப்ரொஜெக்ட் வேலைக்கு, ஒவ்வொரு கட்டத்துக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


சான்றிதழ் கட்டணமும் உயர்வு


தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இளங்கலை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றைப் பெற முன்பு 1000 ரூபாய் கட்டணமாக இருந்தது. இந்தக் கட்டணம் 1500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முதுகலை படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் கட்டணமும் 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


இவை தவிர்த்து, தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றை டிஜி லாக்கர் செயலியில் பதிவேற்றம் செய்யும் ஆன்லைன் சேவைக்கு புதிதாக ரூ.1,500 கட்டணம் செலுத்தப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.  இதற்கிடையே தேர்வுகள் மற்றும் சான்றிதழுக்கான கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.