விழுப்புரம்: இந்தி படித்தவர் எல்லாம் இங்கு வந்து டீ ஆத்திக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை. நாம்தான் வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற பள்ளி நிகழ்வில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

 


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த எல்லோடு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு நூற்றாண்டை நிறைவு செய்யும் நிலையில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உரையாற்றிய வனத்துறை அமைச்சர் பொன்முடி:

 

தைப்பூசம் என்றால் வள்ளலார், வள்ளலார் என்றால் தைப்பூசம். முருகருக்கு தமிழில் வழிபாடு செய்பவர்கள் வள்ளலாரை பின்பற்றுபவர்கள். நம்முடைய இயக்கத்திற்கு முன்னோடிய இருந்தவர் வள்ளலார். பெரியாரையே இழிவாக பேசும் இந்த நாட்டில் வள்ளலாரை பற்றி நாம் சொல்லியாக வேண்டும். கடலூருக்கு சென்ற ஆளுநர் சிலருக்கு பூணுலை அணிவித்தார். அதற்கு எதிரானவர் வள்ளலார். சாதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என பாடுபட்டவர் வள்ளலார்.

 

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கடந்த காலங்களில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் இப்பொழுது நீட்டைக் கொண்டு வந்து நீட்டுகிறார்கள். அகில இந்திய அளவில் நீட் தேர்வு எழுதி வடநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நம் நாட்டில் இடம் கிடைக்கிறது. நம் நாட்டுச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கொண்டு வந்து மூன்று வகுப்பு, ஆறாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு என பொதுத்தேர்வு நடத்துகிறார்கள். மேலும் அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு கூட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என கூறுகிறார்கள்.

 

புதிய கல்விக் கொள்கை ஏற்க மறுத்ததன் காரணமாக கொடுக்கப்பட வேண்டிய நிதியைக்கூட நிறுத்தி வைத்திருக்கிறது மத்திய அரசு. மும்மொழி கொள்கையை கொண்டு வருவதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறார்கள். மும்மொழி கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. சிலர் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பேசுகிறார்கள். இந்தி படித்தவர் எல்லாம் இங்கு வந்து டீ ஆத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை. நாம் தான் வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என அமைச்சர் பொன்முடி பேசினார்.