விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் மஸ்தான் பெயர் இடம்பெறாததால் 10 ஊராட்சி குழு உறுப்பினர்கள் திறப்பு விழாவினை புறக்கணித்தனர். 


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் 84 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார்.


அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் புறக்கணிப்பு 


திறப்பு விழாவில், 28 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வருகை புரிந்தனர். அப்போது அங்கு வைத்திருந்த கல்வெட்டு திறப்பு விழாவில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் கல்வெட்டில் இடம்பெறாததால் செஞ்சி, மேல்மலையனூர், வல்லம், மரக்காணம் உள்ளிட்ட 10 ஊராட்சி குழு உறுப்பினர்கள் திறப்பு விழாவிற்கு வந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயர் இல்லாததால் புறக்கணித்து சென்றனர்.


இருக்கைகள் அமைப்பதில் குளறுபடி


இதேபோன்று திறப்பு விழாவிற்கு வருகை புரிந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன் ஆகியோருக்கு அமர இருக்கைகள் அமைக்கப்படாததால் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து மூவரும் நுழைவு வாயிலில் நின்றிருந்தனர்.


"நீ உட்காருயா சும்மா நடிக்காத"


மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவரை அமர வைத்த அமைச்சர் பொன்முடியிடம் நீங்கள் உட்காருங்கள் என கூற அமைச்சர் கோவப்பட்டு நீ உட்காருயா சும்மா நடிக்காத, பாதி பேர் திறப்பு விழாவிற்கு வரவில்லை என முனுமுனுத்தார். இச்சம்பவத்தால் மாவட்ட  ஊராட்சி அலுவலகம் திறப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.


“உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்”


அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கலைஞர் கருணாநதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டது திமுகவிற்கு கிடைத்த வெற்றியா என கேள்வி எழுப்பியபோது “உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்” என கூறி ஏற்கனவே இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிவிட்டதாக தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.