விழுப்புரம்: தமிழகத்திற்கு இரு மொழிக்கொள்கையே போதும் ஆனால் மத்திய அரசு மூன்றாவதாக ஒரு மொழியை கற்க கூறுவதாகவும் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கூட கிடையாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


வெளி உலகத்தை அறிய வேண்டும்:


விழுப்புரம் திரு.வி.க வீதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கலைவிழா போட்டியினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி கருணாநிதியின் நூற்றாண்டு விழா சடங்கு சம்பர்தாயத்திற்காக கொண்டாடப்படும் நிகழ்வு அல்ல என்றும் அண்ணா, பெரியார், கருணாநிதி போன்றோர்கள் தமிழநாட்டிற்கு என்ன செய்தார்கள் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள் புத்தக பூச்சாக இருக்க கூடாது பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் முந்தைய காலங்களில் 500 மதிப்பெண்களுக்கு 450 மதிப்பெண்கள் எடுப்பதே கடினம் ஆனால் தற்போது 1200 மதிப்பெண்ணுக்கு 1200 மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் படிப்பினை மட்டுமே தெரிந்து கொள்ளாமல் வெளி உலகத்தையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென கூறினார்.


 



சமஸ்கிருதம்:


சந்திராயன் 3 திட்ட இயக்குனரான வீரமுத்துவேல் அரசு பள்ளியில் படுத்து இன்று உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ளதாகவும் தமிழகத்திற்கு இரு மொழிக்கொள்கையே போதும் ஆனால் மத்திய அரசு மூன்றாவதாக ஒரு மொழியை கற்க கூறுவதாகவும் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கூட கிடையாது என தெரிவித்தார்.  எந்த கட்சியாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், சமத்துவம் வளர பாடுபட்ட பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றோர்களின் புகைப்படங்களை வீடுகளில் வைத்து கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார்.




ஆளுநர் V/S அமைச்சர் பொன்முடி 


இந்தியை விட தமிழ் பழமையானது - ரவி:


ஆளுநரின் அழைப்பின் பேரில்,  பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து  18 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகை தந்துள்ளது. தமிழ்நாடு தர்ஷன் என்ற பெயரில் கடந்த 4ம் தேதி தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட அந்த மாணவர்கள் உடன், சென்னை கிண்டியில் ராஜ்பவனில் மாணவர்களுடன் ஆளுநர் ரவி இன்று கலந்துரையாடினார்.  


அப்போது இந்தி திணிப்பு தொடர்பாக பேசிய ஆளுநர் ”இந்தி மொழியை விட தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ்மொழி  மீது இந்தி உட்பட  எந்த மொழியையும் திணிக்க முடியாது.  சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என குறிப்பிட்டுள்ளார்.


மொழி வரலாறு:


2,000 ஆண்டுகளுக்கும் மேலான பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டு, உலகில் வாழும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்றாகும். சமஸ்கிருதமோ 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இரண்டும் நீண்ட காலமாக வளர்ச்சியடைந்துள்ளதால், எந்த மொழி பழமையானது என்பதைக் கண்டறிவது கடினம். இருப்பினும், வாழும் மொழிகளில் தமிழ் மிகவும் பழமையான எழுத்து மரபுகளில் ஒன்றாகும் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது,