அதிமுக ஆட்சி காலத்தில் கடலூர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜை நடைபெற்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
அதிமுக மற்றும் பொதுநல அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளும் திட்டப்பணிகள் மற்றும் மாவட்டத்திற்கு தேவையான பணிகள் குறித்து பேசப்பட்டது.
இதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டவரும் திட்டப் பணிகள் குறித்த செயல்பாடுகள் மற்றும் எவ்வளவு பணி முடிவு பெற்றுள்ளது, எந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை அதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடலூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் பணி துவங்கப்பட உள்ளது, விருதாச்சலம் பேருந்து நிலையம் பணிகள் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, மற்றும் மாவட்டத்தில் சாலை பணிகள், மழை நீர் கால்வாய், புதிய அலுவலக கட்டிட பணிகள் போன்றவை கேட்கப்பட்டுள்ளது இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி அதிகாரிகள் வரி வசூல் மற்றும் வருவாய் குறித்து எந்த இடத்தில் தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை போன்ற பகுதிகளுக்கு 40 MLD குடிநீர் திட்டத்திற்காக 479 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்றது இந்த பணிகள் 68% நிறைவு பெற்றுள்ளது. வரும் 2023 பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்று மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.73.44 கோடி ரூபாய் செலவில் மழையால் பாதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்ய 5 திட்டங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6 பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது. மேலும் அண்ணாமலை நகர் பேரூராட்சி சுற்றி உள்ள பகுதிகளில் 255 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் குடிநீர் வினியோகம் செய்ய திட்டம் துவங்கப்பட உள்ளது. கடலூர் மாநகராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் வகையில் நீர் ஆதாரம் கிடைக்கும் பகுதிகளை கண்டறிந்து அதற்கான திட்டம் துவங்கப்பட உள்ளது.
கடந்த ஆட்சியில் கடலூர் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட டெண்டர்கள் தான் காரணம் மேலும் அவர்களை வேகமாக பணி செய்ய கூறினால் அவர்கள் பணி செய்யாமல் சென்று விடுகிறார்கள், இல்லையென்றால் நீதிமன்றம் சென்று விடுகின்றனர் இது போன்று பல்வேறு சங்கடங்கள் உள்ளது எனவே அந்த பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாநகராட்சியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு 40 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதற்கான பாதை வழங்குவதற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் பல்வேறு பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அது எளிதான காரியம் அல்ல ஏற்கனவே பல இடங்களில் போடப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தில் விடுபட்டிருக்கும் பகுதிகளை ஆய்வு செய்து முறையாக அனைத்து பகுதிகளிலும் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். கடலூர் மாநகராட்சியில் புதிதாக மத்திய பேருந்து நிலையம் அமைக்க இரண்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி துவங்குவதற்கு முன்பு முத்தரப்பு கூட்டம் நடத்தி மக்கள் கருத்துக்களை கேட்டு பேருந்து நிலையம் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.